வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பழங்குடி அமெரிக்க சிறுவர்கள் நடத்தப்பட்ட விதத்துக்குத் தாம் அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கேட்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த காலத்தில் அமெரிக்காவின் பழங்குடிச் சிறுவர்களை அந்நாட்டு அரசாங்கம் வலுக்கட்டாயமாகக் குடும்பங்களிலிருந்து பிரித்து பள்ளி வளாகத்திலேயே தங்கிப் படிக்கும் பள்ளிகளில் (boarding school) சேர்த்தது. அப்பள்ளிகளில் பழங்குடிச் சிறுவர்கள் துன்புறுத்தப்பட்டனர்.
150 ஆண்டுகளுக்கும் மேலாக அத்தகைய பள்ளிகள் வலுக்கட்டாயமாக பழங்குடிச் சிறுவர்களைச் சேர்த்து வந்தன. அதனால் பல சிறுவர்கள் மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்தப்பட்டதோடு பாலியல் கொடுமைக்கும் ஆளானதாக அண்மையில் வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 950க்கும் அதிகமான சிறுவர்கள் இறக்கவும் நேரிட்டது.
“பல காலத்துக்கு முன்பே செய்திருக்கவேண்டியதைச் செய்ய இப்போது நான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்,” என்று வெள்ளை மாளிகையிலிருந்து கிளம்பும்போது திரு பைடன் கூறினார். “பல ஆண்டுகளாகப் பழங்குடிச் சிறுவர்களை நாம் நடத்திய விதத்துக்கு அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கேட்கச் சென்றுகொண்டிருக்கிறேன்.”
திரு பைடன், அரிஸோனா மாநிலத்தில் பழங்குடிச் சமூகத்தினர் உள்ள கிலா ரிவர் (Gila River Indian Reservation) பகுதிக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அந்தப் பயணத்தின்போது வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 25) அவர் பழங்குடி மக்களிடம் மன்னிப்புக் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரிஸோனா, அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களில் ஒன்று.
பழங்குடிச் சிறுவர்கள் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட பள்ளி வளாகத்திலேயே தங்கிப் படிக்கும் பள்ளிகளை அமெரிக்க அரசாங்கம் நடத்தியது. அவை 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 1970கள் வரை செயல்பட்டன.
அந்தப் பள்ளிகளில் குறைந்தது 973 சிறுவர்கள் மாண்டதாக அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பள்ளிகளில் பெரும்பாலானவை சம்பந்தப்பட்ட சிறுவர்களின் வீடுகளிலிருந்து மிகத் தொலைவில் இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க உள்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த டெப் ஹாலண்ட், அந்த அறிக்கைக்கான விசாரணையில் முக்கியப் பங்கு வகித்தவர். திருவாட்டி டெப் ஹாலண்ட், அமெரிக்காவில் அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் பழங்குடி இனத்தவராவார்.

