ஆப்பிரிக்கத் தலைவர்களுக்கு அளித்த உரையை சுருக்கிக்கொண்டு, உலகக் கிண்ணப் போட்டியில் பிரான்ஸ்-மொரோக்கோ அரையிறுதிச் சுற்று ஆட்டத்தை மொரோக்கோ பிரதமருடன் சேர்ந்து பார்த்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
வாஷிங்டனில் கிட்டத்தட்ட 50 நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய திரு பைடன், கத்தாரில் அரையிறுதி ஆட்டம் நடைபெறவிருப்பது குறித்து தெரிந்து வைத்துள்ளார்.
"அரையிறுதி ஆட்டம் தொடங்கப்போகிறது. எனவே உரையைச் சுருக்கிக்கொள்ளுங்கள், பைடன், என்று உங்களுக்குள் நீங்கள் கூறிக்கொள்வது எனக்குத் தெரியும்," என்று திரு பைடன் கூறியதும் அரங்கில் சிரிப்பொலியும் கரகோஷமும் எழுந்தது.
சொன்னதை நிறைவேற்றினார் திரு பைடன். ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்தில் உரையை நிறைவுசெய்தார் அவர்.
பின்னர், மொரோக்கோ பிரதமர் அஸிஸ் அகன்னூச்சுடனும் மற்ற தலைவர்களுடனும் சேர்ந்து திரு பைடன் ஆட்டத்தைக் கண்டார்.
உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதி வரை சென்றுள்ள முதல் ஆப்பிரிக்க அணியான மொரோக்கோவுக்கு அவர் புகழாரம் சூட்டினர்.

