உக்ரேன் போர், பங்ளாதேஷ் நிலவரம்; மோடி-பைடன் கலந்துரையாடல்

2 mins read
091418fc-f2fd-4759-834e-5b2df6588cf6
பங்ளாதேஷில் மக்களின் வாழ்க்கை வழக்கநிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அங்குள்ள சிறுபான்மை இனத்தவர், குறிப்பாக இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அதிபர் பைடனும் தாமும் வலியுறுத்தியிருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று ரஷ்யா-உக்ரேன் போர், பங்ளாதேஷ் அரசியல் நிலவரம் ஆகியவை குறித்து கலந்துரையாடினர்.

இவை குறித்து அதிபர் பைடனுடன் தொலைபேசி மூலம் பேசியதாக திரு மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

உக்ரேனில் அமைதிநிலை, நிலைத்தன்மை மீண்டும் திரும்புதற்கு இந்தியா முழு ஆதரவு வழங்க தயாராக இருக்கிறது எனப் பிரதமர் மோடி மறுஉறுதி செய்தார்.

அத்துடன், பங்ளாதேஷ் மக்களின் வாழ்க்கை வழக்கநிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அங்குள்ள சிறுபான்மை இனத்தவர்கள், குறிப்பாக இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அதிபர் பைடனும் தாமும் வலியுறுத்தியதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதற்கிடையே, இரு தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் குறித்து வெள்ளை மாளிகை தனிப்பட்ட முறையில் அறிக்கை வெளியிட்டது.

அண்மையில் போலந்துக்கும் உக்ரேனுக்கும் பிரதமர் மோடி மேற்கொண்டிருந்த பயணத்தை அதிபர் பைடன் பாராட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துலகச் சட்டங்களுக்கு உட்பட்டு போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இரு தலைவர்களும் கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி, கடந்த வாரம் உக்ரேனுக்குப் பயணம் மேற்கொண்டார்.

நவீன உக்ரேனிய வரலாற்றில் அங்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமை திரு மோடியைச் சேரும்.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி அங்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்குக் கொண்டு வரும்படி உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைப் பிரதமர் மோடி ஊக்குவித்தார்.

இதற்கு உதவிக்கரம் நீட்ட இந்தியா தயாராக இருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி, கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார்.

அங்கு அவர் ரஷ்ய அதிபர் புட்டினைச் சந்தித்துப் பேசினார்.

அந்தச் சந்திப்பு உக்ரேனுக்கும் அமெரிக்காவுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்