கிஹேய், ஹவாயி: மாவி பகுதியில் ஏற்பட்ட கடும் காட்டுத் தீச்சம்பவத்திலிருந்து மீண்டுவருவதற்கு அங்குள்ள மக்களுக்கு உதவ தான் தெரிவித்திருக்கும் கடப்பாட்டை அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து கட்டிக்காக்கும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.
சென்ற வாரம் லஹைனா நகரைக் கடும் காட்டுத்தீ சூழ்ந்தது. ஆகஸ்ட் 8ஆம் தேதி மூண்ட காட்டுத்தீயில் குறைந்தது 111 பேர் மாண்டனர். நூற்றுக்கணக்கானோர் இன்னும் காணவில்லை.
மத்திய அரசாங்கம் ஏற்கெனவே நூற்றுக்கணக்கான அவசரநிலை அதிகாரிகள், ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்கள், போர்வைகள், கட்டில்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை சேதமடைந்த அந்நகருக்கு அனுப்பியிருப்பதாகத் திரு பைடன் கூறினார்.
“எவ்வளவு காலம் எடுத்தாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம். இது நான் உங்களுக்கு அளிக்கும் வாக்குறுதி” என்று திரு பைடன் தெரிவித்தார்.
அவர் மீட்புப் பணியாளர்களின் முயற்சிகளையும் குறிப்பிட்டுச் சொன்னார். அவர்களில் பலர் தனிப்பட்ட முறையில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இடைவிடாமல் பணியாற்றிய தேடல் குழுக்களையும் அவர் பாராட்டினார்.
திரு பைடனும் அவரது துணைவியார் திருவாட்டி ஜில் பைடனும் திங்கட்கிழமை ஹவாயி செல்வார்கள். அவர்கள் சேதமுற்ற பகுதிகளைப் பார்வையிட்டு, மீட்புப் பணியாளர்கள், உயிர் பிழைத்தவர்கள், மத்திய, மாநில, உள்ளூர் அதிகாரிகள் ஆகியோரைச் சந்திப்பார்கள்.