வாஷிங்டன்: லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீச் சம்பவம் கலிஃபோர்னியா வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் ஆக மோசமான பேரழிவு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.
தீச் சம்பவத்திற்கு அரசாங்கம் கூடுதல் நிதியை வழங்கி லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்துக்கு உதவும் என்று அவர் உறுதி தெரிவித்து உள்ளார்.
கலிஃபோர்னிய தீச்சம்பவம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரிகளின் சிறப்புக் கூட்டத்தை வியாழக்கிழமை (ஜனவரி 9) அதிபர் கூட்டினார்.
அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மிக மோசமாகப் பரவிய தீ, கலிஃபோர்னிய வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத ஆக மோசமான பேரழிவு என்றார்.
லாஸ் ஏஞ்சலிஸ் மக்கள் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாக திரு பைடன் குறிப்பிட்டார்.
பயங்கரமாக எரியும் தீக்கிடையே சென்று தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பாளர்களை ‘நாயகர்கள்’ என்று அவர் புகழ்ந்தார்.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் உதவிகளை அளிக்கும் பொருட்டு, தனது ரோம் பயணத்தை திரு பைடன் ரத்து செய்துவிட்டார்.
அவர் வியாழக்கிழமை (ஜனவரி 9) இத்தாலி செல்வதாக இருந்தது. ஆயினும், மோசமான தீச்சம்பவம் நிகழ்ந்துகொண்டு இருக்கையில் வெளிநாடு செல்லாமல் வாஷிங்டன் நகரிலேயே தாம் இருக்கப்போவதாக அதிபர் கூறியதாக வெள்ளை மாளிகை அறிக்கை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
நிதி உதவி கேட்டு கலிஃபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம் விடுத்த வேண்டுகோளைச் செவிமடுத்த அதிபர், பேரழிவைச் சமாளிக்க, முதல் 180 நாள்களுக்கு ஆகும் செலவு அனைத்தையும் மத்திய அரசாங்கம் ஏற்கும் என்றார்.
தீயில் கருகும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்துக்கு மத்திய அரசாங்கத்தின் 400 தீயணைப்பாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார் அவர்.
மேலும், தீயணைப்பில் உதவ 30 விமானங்களும் ஹெலிகாப்டர்களும் அங்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் திரு பைடன் தெரிவித்தார்.
அந்த முயற்சிக்கு அமெரிக்க ராணுவமும் கைகொடுக்கும் வகையில், பெரிய எட்டு விமானங்களையும் காட்டுத் தீயை அணைப்பதில் திறன்வாய்ந்த 500 வீரர்களையும் அது லாஸ் ஏஞ்சலிசுக்கு அனுப்புகிறது.
இதற்கிடையே, துணை அதிபர் கமலா ஹாரிசும் தமது சிங்கப்பூர் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கான பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த அவர், தீச்சம்பவம் ஒட்டுமொத்த பேரழிவு என்று குறிப்பிட்டார்.
மரணம் 7 ஆனது
இந்நிலையில், ஜனவரி 7 முதல் லாஸ் ஏஸ்சலிஸ் நகரில் பரவிய காட்டுத்தீக்குப் பலியானோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பேலிசேட்ஸில் ஒருவரும் ஈட்டனில் இன்னொருவரும் மாண்டதைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை கூடியது.
காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க 180,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இருப்பிடத்தைக் காலிசெய்து பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்.
மேலும், 200,000 பேருக்கு வெளியேற ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.