நியூ ஆர்லின்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லின்ஸ் நகரில் புத்தாண்டுக் கொண்டாட்டக் கூட்டத்திற்குள் வாகனத்தைச் செலுத்தி தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துவிட்டது.
லூசியானா மாநிலத்தில் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 35 என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகாலை வேளையில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் பயங்கரவாதத் தொடர்புடையதா என்று விசாரிப்பதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃபிஐ (FBI) தெரிவித்து உள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட ஆடவர் இயன்றவரை ஏராளமானோர் மீது வாகனத்தை மோத முயன்றதாக காவல்துறைத் தலைவர் ஆன் கிர்க்பேட்ரிக் ஜனவரி 1ஆம் தேதி தொலைக்காட்சி வாயிலாக அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
காவல்துறையினர் சுட்டதில் அந்த ஆடவர் மாண்டதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறினர்.
மக்கள் ஒன்றுகூடலில் வாகனத்தைச் செலுத்திய சம்பவம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.15 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் அதிகாலை 5.15 மணி) நிகழ்ந்தது.
பெரிய இசைநிகழ்ச்சிகள் அதிகமாக நடந்தேறும் ஃபிரெஞ்சு குவார்ட்டர் பகுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்ட வேளையில் சற்றும் எதிர்பாராத விதமாக அவர்களை மோதியவாறு வாகனம் அதிகவேகத்தில் சென்றது.
தடுப்புகள் மீது மோதி வாகனத்தைக் கண்மூடித்தனமாக ஓட்டிய ஆடவர், காவல்துறையினரை நோக்கிச் சுட்டார். வாகனத்தில் இருந்த இரு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவத்திற்குப் பின்னர் போர்பன் ஸ்திரீட்டில் பொருள்கள் சிதறிக் கிடந்தன.
இந்நிலையில், கொல்லப்பட்ட சந்தேக நபர் 42 வயது அமெரிக்கக் குடிமகனான ஷம்சுத் டின் ஜப்பார் என்று மூத்த அமலாக்க அதிகாரிகள் கூறியதாக என்பிசி நியூஸ் (NBC News) கூறியது. மேலும், அந்த ஆடவர் 13 ஆண்டு காலம் ராணுவத்தில் பணியாற்றியவர் என்றும் ஒரு தகவல் குறிப்பிட்டது.
இதற்கிடையே, அந்த ஆடவர் தனியாகச் செயல்படவில்லை என்று அமெரிக்கப் புலன் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அவர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் ஐஎஸ் அமைப்பின் கொடியும் சம்பவ இடம் அருகே இரண்டு வெடிப்புச் சாதனங்களும் காணப்பட்டதாக எஃபிஐ கூறியது.
இந்நிலையில், பெருங்கூட்டத்திற்குள் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற ஆடவர் கொலை வேட்கை கொண்டவர் எனத் தெரிய வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
தாக்குதலுக்கு சில மணி நேரங்கள் முன்னர் சமூக ஊடகத்தில் ஆடவர் பதிவேற்றிய காணொளியில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தால் தாம் ஈர்க்கப்பட்டதாகவும் கொலை செய்யும் ஆவலை வெளிப்படுத்தியதாகவும் எஃபிஐ கண்டறிந்தது என்றார் திரு பைடன்.
விசாரணை இன்னும் ஆரம்பகட்டத்தில் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், ஆடவருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்தும் கூட்டுச் சதிகாரர்கள் சம்பந்தப்பட்டு உள்ளார்களா என்பது குறித்தும் உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

