வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 10ஆம் தேதி வியட்னாம் செல்வார் என்று வெள்ளை மாளிகை திங்கட்கிழமை தெரிவித்தது.
அவர் அங்கு ஆட்சி நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான நுயென் பூ டிராங்கை சந்திப்பார் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியாவிற்குச் செல்லவிருக்கிறார் எனவும் அதை முடித்துக்கொண்டு அவர் வியட்னாம் செல்வார் எனவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறினார்.
இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின்போது புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு முன்னேறும் வியட்னாமின் பொருளாதாரத்தை எப்படி உயர்த்துவது, அமெரிக்கா, வியட்னாம் உடனான கல்விப் பரிமாற்றத்தை விரிவுபடுத்தும் வழிகள் ஆகியவை கலந்தாலோசிக்கப்படும் என அவர் சொன்னார்.
மேலும், வியட்னாமில் நிலைத்தன்மை, அமைதி, செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வழிகளும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும் இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

