வாஷிங்டன்: அமெரிக்காவில் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகியவற்றில் பதிவிடப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அம்சத்தை ரத்து செய்துள்ள மெட்டா நிறுவனத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சாடியுள்ளார்.
இத்தகைய முடிவை எடுத்ததற்கு மெட்டா வெட்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இந்த நடைமுறை மற்ற நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டால் அது பேரளவில் தீங்கு விளைவிக்கும் என்று உலகளாவிய கட்டமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தகவல்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அணுகுமுறை கைவிடப்படும் என்று மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பர்க் அண்மையில் அறிவித்தார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப்பைத் திருப்திப்படுத்தவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தகவல்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கருத்துச் சுதந்திரமும் வலதுசாரிக் கருத்துகளும் கட்டுப்படுத்தப்படுவதாக டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நீண்டகாலமாகவே கூறி வருகின்றனர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பைடன் கடும் அதிருப்தி தெரிவித்தார்.
“உண்மையை எடுத்துச் சொல்வது மிகவும் முக்கியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
மெட்டா நிறுவனம் எடுத்துள்ள முடிவு அமெரிக்கக் கொள்கைகளுக்கு நேர் எதிரானது என்றார் அவர்.
மெட்டா எடுத்துள்ள முடிவுக்கு அனைத்துலக தகவல் சரிபார்ப்பு கட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
“பொய்ச் செய்திகளால் சில நாடுகள் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடும். அவற்றின் மூலம் அரசியல் நிலையற்றதன்மை ஏற்படக்கூடும்.
“பொய்ச் செய்திகள் தேர்தலில் குறுக்கிடக்கூடும். இதனால் வன்முறை, இனப்படுகொலை நிகழும் அபாயம் உள்ளது,” என்று திரு ஸக்கர்பர்க்கிடம் அனுப்பிய கடிதத்தில் அந்தக் கட்டமைப்பு குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், தகவலின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அணுகுமுறை சமூகத்தினரிடையே நம்பிக்கையில்லாத நிலையை ஏற்படுத்துவதாக ஸக்கர்பர்க் வாதிட்டுள்ளார்.

