இருதரப்பு உடன்பாடுகள் ஆசியான்- இயூ உடன்பாட்டிற்கு வழிவகுக்கும்: கான்

இருதரப்பு உடன்பாடுகள் ஆசியான்- இயூ உடன்பாட்டிற்கு வழிவகுக்கும்: கான்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Sep 2026 - 3:12 pm

2 mins read

மணிலா: ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் தனிப்பட்ட தென்கிழக்காசிய நாட்டுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள், ஆசியானுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாட்டுக்கு வழிவகுக்கும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியமும் பிலிப்பீன்சும் தனிப்பட்ட விதத்தில் செய்துகொண்ட தடையற்ற ஒப்பந்தம் குறித்து அறிவித்ததை அடுத்து திரு கான், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) அந்தக் கருத்தை முன்வைத்தார்.

“அவை ஒன்றின்மீது ஒன்று கட்டியெழுப்பப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் தனிப்பட்ட நாடுகளுக்கும் இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை ஆசியான் அளவில் ஒருங்கிணைப்பிற்கான தளத்தை அமைத்துத்தரும்,” என்றார் திரு கான்.

வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான், மணிலாவில் நடைபெற்ற ஆசியான் பொருளியல் அமைச்சர்களின் கூட்டத்திற்கு இடையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

சிங்கப்பூர், வியட்னாம் ஆகியவற்றுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கெனவே தடையற்ற வர்த்தக உடன்பாடுகளைச் செய்துள்ள நிலையில் இந்தோனீசியாவுடனான உடன்பாடு கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, தாய்லாந்து, மலேசியா ஆகியவற்றுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

இத்தகைய இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் ஆசியான் நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்று மற்றதன் தேவைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள உதவும் என்று குறிப்பிட்ட திரு கான், ஒட்டுமொத்த ஆசியான் வட்டாரத்தையும் ஈடுபடுத்திய ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள அது வழிவகுக்கும் என்றார்.

“தடையற்ற வர்த்தக உடன்பாடு நீண்ட கால இலக்கு. ஆனால், நாம் கட்டம் கட்டமாக அந்த அணுகுமுறையை மேற்கொள்ளலாம்,” என்ற அவர், துரிதமான வளர்ச்சியைக் காணக்கூடிய அம்சங்களில் படிப்படியாக முன்னேறலாம் என்று அறிவுறுத்தினார்.

திரு கானின் கருத்துகளை ஆமோதிக்கும் வகையில் ஆசியானும் ஐரோப்பிய ஒன்றியமும் வட்டாரங்களுக்கு இடையிலான பொருளியல் கட்டமைப்பை 2027ஆம் ஆண்டுக்குள் நிறுவும்படி ஐரோப்பிய வர்த்தகங்கள் கேட்டுக்கொண்டன.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் இறுதியாகும்வரை காத்திருக்காமல் இருதரப்பும் படிப்படியாகப் பொருளியல் உறவுகளை வலுப்படுத்த உதவும் மாதிரிக் கட்டமைப்பை ஐரோப்பிய ஒன்றிய - ஆசியான் வர்த்தக மன்றம் முன்மொழிந்துள்ளது.

மன்றம், ஆக அண்மையில் நடத்திய வர்த்தகம் தொடர்பான கருத்தாய்வில், 74 விழுக்காட்டு ஐரோப்பிய வர்த்தகங்கள், ஆசியானும் விரிவான தடையற்ற வர்த்தக உடன்பாடும் இன்னும் பெரிய அளவிலான நன்மைகளைப் பயக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தன.

கிட்டத்தட்ட 49 விழுக்காட்டு வர்த்தகங்கள் அத்தகைய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த ஆண்டே தொடங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்