பிரதமர் பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை எந்த நேரத்திலும் மீண்டும் கொண்டு வரலாம்: அமைச்சர் ஃபாமி

பிரதமர் பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை எந்த நேரத்திலும் மீண்டும் கொண்டு வரலாம்: அமைச்சர் ஃபாமி

1 mins read
50860faf-da28-4465-b595-cde47010cda7
மலேசியாவின் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்சில். - படம்: பெர்னாமா

சைபர்ஜெயா: மலேசியப் பிரதமரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் அரசியலமைப்பு திருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தின் அடுத்தடுத்த கூட்டத்தொடர்களின்போது எந்த நேரத்திலும் மீண்டும் பரிசீலனைக்குக் கொண்டு வர முடியும் என்று அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தெரிவித்தார்.

இந்த மசோதாவினால் அரசாங்கத்திற்கோ அல்லது பிரதமருக்கோ தனிப்பட்ட முறையில் எந்த பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் ஃபாமி வலியுறுத்தினார்.

திங்கட்கிழமையன்று (மார்ச் 2) நாடாளுமன்றத்தில் 2026 அரசியலமைப்பு (திருத்த) மசோதா நிறைவேறத் தவறியது. பிரதமர் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்ற ஆதரவு தெரிவிப்பது போன்ற ஒரு சமிக்ஞையை எதிர்க்கட்சிகள் வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருதுவதாக அவர் கூறினார்.

“அது பிரதமர் விரும்புவது அல்ல. ஆனால் குறிப்பாக எதிர்க்கட்சிகளால் அத்தகைய சமிக்ஞை கொடுக்கப்பட்டுள்ளது,” என்றார் அமைச்சர் ஃபாமி.

“இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை ஒரு கட்சி சார்ந்த விஷயமாகப் பார்க்காமல், சிறந்த நிர்வாகம் மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிறுவன சீர்திருத்தமாகவே பார்க்க வேண்டும்.

‘இது பிரதமரின் பதவிக்காலத்திற்கு வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பதைப் பற்றியது. பொறுப்புணர்வு என்பது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முக்கியமானது அல்லவா?” என்று அமைச்சர் ஃபாமி கேள்வி எழுப்பினார்

குறிப்புச் சொற்கள்