கோலாலம்பூர்: தலைமைச் சட்ட அதிகாரி, அரசு வழக்கறிஞரின் பொறுப்புகளைப் பிரிப்பதற்கும், பிரதமரின் பதவிக்காலத்தை இரண்டு தவணைக் காலத்துக்கு மட்டுப்படுத்துவதற்குமான மசோதாக்கள் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காகத் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மசோதாக்கள் அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா 2025 மற்றும் அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா (எண் 2) 2026 ஆகியவற்றின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டதாக சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்த அமைச்சர் அஸலினா ஓத்மான் சையது கூறினார்.
இரண்டு மசோதாக்களின் இரண்டாவது வாசிப்பும் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது நடைபெற உள்ளது என்று அஸலினா கூறினார்.
இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். அதாவது 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 148 பேர் அவற்றுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

