‘பிட்தம்ப்’ நிறுவனத்தின் பில்லியன் டாலர் தவறு

2,000 தென்கொரிய நாயணங்களை (வான்) கொடுக்க நினைத்தது நிறுவனம். ஆனால்.. 

‘பிட்தம்ப்’ நிறுவனத்தின் பில்லியன் டாலர் தவறு

1 mins read
166535f1-ada3-4721-bded-faa8c60396ec
மொத்தம் 695 வாடிக்கையாளர்கள் நாணயங்களைத் தவறுதலாகப் பெற்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: 40 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமான மின்னிலக்க நாணயத்தைத் தெரியாமல் கொடுத்துவிட்டதாகத் தென்கொரிய மின்னிலக்க நாணயமாற்று நிறுவனமான ‘பிட்தம்ப்’ (Bithumb) தெரிவித்துள்ளது. இது, இந்த நாணயத்தின் பேரளவு விற்பனைக்கு வித்திட்டது.

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட பிட்தம்ப், கொடுத்திருந்த 620,000 மின்னிலக்க நாணயங்களில் 99.7 விழுக்காட்டைத் திரும்பப் பெற்றதாகக் கூறியுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு, தற்போதைய சந்தையின்படி கிட்டத்தட்ட 44 பில்லியன் டாலர்.

மொத்தம் 695 வாடிக்கையாளர்கள் இந்த நாணயங்களைத் தவறுதலாகப் பெற்றனர்.

விளம்பர நிகழ்ச்சி ஒன்றின் அங்கமாக, ஒவ்வொரு பயனருக்கும் 2,000 கொரிய வொன் (1.37 அமெரிக்க டாலர்) ரொக்கத்தை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதற்குப் பதிலாக வெற்றியாளர் எல்லோருக்கும் குறைந்தது 2,000 மின்னிலக்க நாணயங்கள் கொடுக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

“இந்தச் சம்பவத்திற்கும் வெளியிலிருந்து எந்த ஊடுருவலுக்கும் பாதுகாப்பு அத்துமீறல்களுக்கும் தொடர்பு இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைக்க விரும்புகிறோம். அத்துடன், கட்டமைப்புப் பாதுகாப்பிலும் வாடிக்கையாளர் சொத்து நிர்வாகத்திலும் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று பிட்தம்ப் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

பிட்காயின் விலை 17 விழுக்காடு குறைந்து 81.1 மில்லியன் வொன்னை எட்டியது. அதன் பிறகு விலை மீண்டு கடைசியாக தற்போதைய நிலவரப்படி 104.5 மில்லியன் வொன் மதிப்பில் விற்பனையானது.

தென்கொரியாவில் ஆகப் பெரிய மின்னிலக்க நாணய நிறுவனமான ‘அப்பிட்’டிற்கு (Upbit) அடுத்த நிலையில் பிட்தம்ப் உள்ளது.

குறிப்புச் சொற்கள்