பாரிஸ்: செயற்கை நுண்ணறிவு உலகை ஆக்கிரமித்து வரும் காலக்கட்டத்தில், கணிதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த உலகப் பெரும் பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட், தாம் பயின்ற கல்வி நிறுவனத்தில் அமையவுள்ள கணித ஆய்வு மையத்திற்கு 50 மில்லியன் யூரோ (S$ 74 மில்லியன் டாலர்) நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பாரிசில் ஜூலை 2ஆம் தேதி நடைபெற்ற அதிகாரபூர்வ நிகழ்ச்சியில், 1971ல் தாம் பட்டம் பெற்ற புகழ்பெற்ற பலதுறைத் தொழிற்கல்லூரியில் ராணுவப் பொறியியல் கல்லூரிக்கு இந்த நிதியுதவியை வழங்குவதற்கான காரணங்களை அவர் விளக்கினார்.
“இது, ஒரு நாட்டின் இறையாண்மை சார்ந்த விவகாரம். செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சியை நாம் நாளுக்கு நாள் பார்த்து வருகிறோம். கணிதத்தை யார் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே எதிர்கால உலகை ஆள்வார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இந்த நிதியுதவி, அர்னால்டின் குடும்ப சொத்து அமைப்பான அகாஷ் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம்தான் அர்னால்டின் ஹென்னசி லூயிஸ் உய்ட்டன் எஸ்இ எனும் எல்விஎம்எச் நிறுவனத்தை நடத்துகிறது.
இந்த நிதி, பாரிஸ் புறநகர்ப் பகுதியான பாலாய்சியாவில் அமையவிருக்கும் கணித ஆய்வு மையத்தின் புதிய கட்டடத்திற்கும் அனைத்துலக ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்யவும் மாநாடுகளை நடத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
நெப்போலியன் போனபார்ட்டின் கல்லறை அமைந்துள்ள பாரிஸ் மையப்பகுதியின் ‘லெஸ் இன்வாலிட்ஸ்’ ராணுவ வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, சுமார் 165 பில்லியன் அமெரிக்க டாலர் (213 பில்லியன் சிங்கப்பூர் டாலர்) சொத்து மதிப்புடன் ஐரோப்பாவின் ஆகப் பெரிய பணக்காரராகத் திகழும் அர்னால்டின் இந்த நிதியுதவியை, அவரது தேசப்பற்று மிக்க செயல் என்று பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு பாராட்டியுள்ளார்.

