உயிர்வாயுக் கலன், காற்றுச் சுத்திகரிப்பான் விற்பனை அதிகரிப்பு

உயிர்வாயுக் கலன், காற்றுச் சுத்திகரிப்பான் விற்பனை அதிகரிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

18 Oct 2026 - 12:41 pm

1 mins read

மலேசியா: இந்தோனீசியக் காட்டுத்தீயால் பரவியுள்ள நச்சுப் புகைமூட்டம் காரணமாக, தென்கிழக்காசிய வட்டாரத்தில் உயிர்வாயுக் கலன்கள், காற்றுச் சுத்திகரிப்பான்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக அவற்றைத் தயாரிப்போர் தெரிவித்துள்ளனர்.

கோலாலம்பூருக்கு வெளியே மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் ‘ஏஏ அலைவ்’ நிறுவனத்தில், உயிர்வாயுக் கலன்களை விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.

புகைமூட்டம் காரணமாக அவற்றின் விற்பனை 35 விழுக்காடு கூடியுள்ளதாக அந்நிறுவனத்தின் விற்பனைக் குழுவைச் சேர்ந்த ரஃபினா ஃபிர்தௌஸ் தெரிவித்தார்.

அந்நிறுவனம் உயிர்வாயுக் கலன்களுடன், உயிர்வாயு செறிவூட்டிகளையும் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது.

வழக்கமாக 1,000 மணி நேரப் பயன்பாட்டுக்குப்பிறகு மாற்றப்படும் செறிவூட்டி வடிகட்டிகளின் செயல்பாட்டுக் காலத்தைப் புகைமூட்டத்தின் தூய்மைக்கேடு பாதியாய்க் குறைத்துவிட்டதாகத் தொழில்நுட்ப வல்லுநர் முபஸ்ஸர் கான் கூறினார்.

அந்நிறுவனம் தற்போது நாள்தோறும் ஏறக்குறைய 40 வாடகைச் சாதனங்களை விநியோகித்து வருகிறது.

இதேபோல், ஆகஸ்ட்டில் காற்றுத்தரம் குறையத் தொடங்கியதிலிருந்து காற்றுச் சுத்திகரிப்பான்களின் விற்பனையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12 வரை காற்றுச் சுத்திகரிப்பான் விற்பனை 600 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கோர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

சிங்கப்பூரின் கெய்ன் சிட்டி நிறுவனமும் காற்றுச் சுத்திகரிப்பான்களுக்கான தேவை பேரளவு அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்