இடம் மாறும் பறவைகளால் பறவைக் காய்ச்சல் பரவலாம்: ஆய்வு

1 mins read
a587722d-ab14-4ac9-ac47-167b5f0169eb
பறவைகள் இடம் மாறுவது பறவைக் காய்ச்சல் கிருமிப் பரவலுக்கு வழிவிடலாம் என்று கூறப்படுகிறது. - படம்: கிம்பர்லி ஃபொர்னஸ்

பொதுவாக கிருமித்தொற்றுக்கு உள்ளான பண்ணை விலங்குகளுடன் பாதுகாப்பின்றி தொடர்பிலிருக்கும்போதுதான் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும் சாத்தியம் இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை.

ஆனால், இடம் மாறும் பறவைகளாலும் (migratory birds) அந்நோய்க் கிருமி மற்ற விலங்குகள், மனிதர்களுக்குப் பரவக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

கடற்கரைப் பகுதிகளில் இருக்கும் வனங்களை அழிப்பது (deforestation) போன்ற நடவடிக்கைகளால் இடம் மாறும் பறவைகள் சமூகங்களுக்கு அருகாமையில் வரக்கூடிய நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது, பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவ வழிவகுக்கலாம் என்று கூறப்படுகிறது.

மலேசியாவில் உள்ள சாபா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் வாழும் 2,000 பேரின் ரத்தத்தைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் கம்யூனிக்கே‌ஷன்ஸ் (Nature Communications) சஞ்சிகையில் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதியன்று வெளியிடப்பட்டன.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் கொள்ளைநோய் அறிவியல் ஆய்வு நிலையம், சாபாவில் இருக்கும் மலேசிய பல்கலைக்கழக (Universiti Malaysia) கிளையின் போர்னியோ மருத்துவ, சுகாதார ஆய்வு நிலையம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து ஆய்வை நடத்தினர்.

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவுவது அரிது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கிருமி மனிதர் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதைக்கு இல்லை.

குறிப்புச் சொற்கள்