நியூயார்க்: பறவைக் காய்ச்சல் விலங்குகளுக்குப் பரவாமல் இருக்க அதிக அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலக விலங்கு நல அமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்வதன் மூலம் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவாமல் இருக்கும் என்று அது கூறியது.
சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் காரணமாக ஒருவர் மாண்டார். அதைத் தொடர்ந்து தற்போது உலக விலங்கு நல அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகப் பறவைக் காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான பறவைகள் மாண்டன, உணவுகள் விலை கூடின, புதிய கொள்ளை நோய் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.
பறவைக் காய்ச்சலுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தற்போதைய சூழல் எடுத்துரைக்கிறது, விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்த்தொற்றுகளைக் குறைப்பது மிக முக்கியம் என்று உலக விலங்கு நல அமைப்பு கூறியுள்ளது.