கோலாலம்பூர்: மலேசியாவின் புக்கிட் டாங்கா பகுதியில் ஓய்வுக்காக லாரியை நிறுத்திய ஓட்டுநரை கறுஞ்சிறுத்தை ஒன்று தாக்கியது.
இதையடுத்து, ஆடவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரது தலையில் 30க்கும் அதிகமான தையல்கள் போடப்பட்டன.
இச்சம்பவம் ஏப்ரல் 3ஆம் தேதி நடந்தது.
சுரேஷ் என்ற அந்த 54 வயது மலேசிய ஓட்டுநர் சிலாங்கூரில் உள்ள கிளாங்கில் வசிக்கிறார்.. அவர் கோலாலம்பூரிலிருந்து ஜெலெபுவுக்கு கோழிகளுக்கான தீனிகளைச் சரக்கு லாரியில் எடுத்துச் சென்றார்.
சரக்குகளை ஒப்படைத்துவிட்டு கோலாலம்பூருக்குத் திரும்பும்போது வழியில் லாரியை அவர் நிறுத்தினார்.
வாகனத்தின் சக்கரங்கள் நன்றாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தபோது கறுஞ்சிறுத்தை ஒன்று திடீரென தம்மைத் தாக்கியதாக சுரேஷ் கூறினார்.
“கறுஞ்சிறுத்தை நகத்தால் என் தலையைத் தாக்கியது. அது தலையைக் கடிக்க வந்தபோது கையில் இருந்த போத்தலைக் கொண்டு தடுத்தேன். போத்தல் இல்லை என்றால் கறுஞ்சிறுத்தைக்கு உணவாக மாறி இருப்பேன். அதிர்ஷ்டவசமாக அப்போது மற்றொரு வாகனம் வந்தது,” என்று சுரேஷ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
காயம் காரணமாக சுரேஷ் மூன்று நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று அதன் பின்னர் வீடு திரும்பினார்.
காயங்கள் குணமடைந்தாலும் மனதளவில் தாம் பாதிக்கப்பட்டதாக சுரேஷ் தெரிவித்தார். தூக்கத்தில்கூட கறுஞ்சிறுத்தை துரத்துவதுபோல் கனவு வருவதாக அவர் தெரிவித்தார்.