ஜோகூர் பாரு மின்நிலையத்தில் தீச்சம்பவத்தால் மின்தடை; இருவர் மீது மின்சாரம் பாய்ந்தது

ஜோகூர் பாரு மின்நிலையத்தில் தீச்சம்பவத்தால் மின்தடை; இருவர் மீது மின்சாரம் பாய்ந்தது

படம்: சான் சான் சான்/ஃபேஸ்புக்

17 Oct 2026 - 1:40 pm

1 mins read

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் உள்ள பல முக்கியக் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) மாலை 6 மணி முதல் இரவு 7.45 மணி வரை மோசமான மின்தடை ஏற்பட்டது.

கங்கார் தெப்ராவ்வில் உள்ள மின்நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவம் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. நிலையத்தின் ஊழியர்கள் இருவர்மீது மின்சாரம் பாய்ந்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

ஜோகூர் ஜெயா, மவுன்ட் ஆஸ்டின், தாமான் கயா, உலு திராம், தாமான் எசான் ஜெயா, தாமான் தேசா தெப்ராவ் ஆகிய பகுதிகள் இந்த மின்தடையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் அடங்கும்.

முக்கியச் சாலைச் சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து மின்விளக்குகள் மின்தடையால் செயல்படாமல் போனதால், அப்பகுதிகளில் உள்ள முக்கியச் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சில இடங்களில் கைப்பேசித் தொடர்பும் பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரச் சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஜோகூர் பாருதீ விபத்துமின்தடை