டமாஸ்கஸ்: சிரியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) தெரிவித்தனர்.
குப்பையைக் கையாளும் பணியில் உள்ள ஒருவர் பழைய வெடிகுண்டு என்று நம்பப்படும் குண்டைக் கையாண்டபோது சனிக்கிழமை (மார்ச் 15) இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
லட்டாக்கியா நகரில் நிகழ்ந்த வெடிப்பு காரணமாக அங்குள்ள நான்கு தள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. குடியிருப்பாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் இடிபாடுகளிலிருந்து உடல்களை மீட்டனர். சிறார் ஐவரின் உடல்களும் அவற்றில் அடங்கும்.
இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டடத்தில் உள்ள இயந்திர பாகங்கள் கடையில் (hardware store) ஏற்பட்ட வெடிப்பால் 16 பேர் கொல்லப்பட்டனர் என்று சிரியாவின் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது. குறைந்தது 18 பேர் காயமடைந்ததாகவும் அது டெலிகிராம் செயலியில் குறிப்பிட்டது.
தேடல், மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் படை டெலிகிராமில் தெரிவித்தது.
போர் கண்காணிப்பு அமைப்பான சிரியா மனித உரிமை கண்காணிப்பு நிலையம் (Syrian Observatory for Human Rights) இச்சம்பவத்தை விபத்தாக வகைப்படுத்தியுள்ளது.

