கல்விக்கண்ணைத் திறந்துவைக்கும் பார்வையற்ற ஆசிரியர் பிரகாஷ்

கல்விக்கண்ணைத் திறந்துவைக்கும் பார்வையற்ற ஆசிரியர் பிரகாஷ்

2 mins read
11a62927-fc61-4547-9ca1-98b985a0338d
மாணவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதில் தனக்குச் சிரமம் ஏதுமில்லை என்றார் துணைப்பாட ஆசிரியர் பிரகாஷ் சூரியமூர்த்தி, 42. - படம்: மலேசிய ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: பிறந்ததுமுதல் தன்னைச் சுற்றி உள்ள உலகத்தைப் பார்க்கும் வாய்ப்பை 42 வயது பிரகாஷ் சூரியமூர்த்தி பெறவில்லை.

ஆனால், இன்று மாணவர்களின் கல்விக்கண்ணைத் திறந்துவைக்கும் ஆசானாக விளங்குகிறார் இவர்.

வேலை தேடும் முயற்சியில் 200 நேர்முகத் தேர்வுகளில் தோல்விகண்ட பின்பும் ஒரு முழுநேரப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற அவரின் துணிச்சலே அவரது தனித்துவத்துக்குச் சான்று.

கடந்த 15 ஆண்டுகளாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில், இல்லத் துணைப்பாட ஆசிரியராக வலம்வருகிறார் பிரகாஷ்.

பார்வையற்றவர்கள் பிச்சை எடுக்கவும் திசுத்தாள் விற்கவும்தான் முடியும் என்று பலர் கொண்டுள்ள தவறான எண்ணத்தை உடைத்தெறிவதில் நான் மனநிறைவு அடைகிறேன்.
பிரகாஷ் சூரியமூர்த்தி, 42

இவரிடம் பாடம் படிப்பதற்காகவே தூரம் கருதாமல் தஞ்சோங் மாலிம், பேராக் ஆகிய பகுதிகளிலிருந்து மாணவர்கள் வார இறுதிகளில் கோலாலம்பூருக்குப் பயணம் செய்கின்றனர்.

‘ஃபார்ம் 1’ முதல் ‘ஃபார்ம் 6’ வரை பயிலும் மாணவர்கள் தங்களின் மலாய்மொழி மற்றும் வரலாற்றுப் பாடங்களில் தேர்ச்சிபெற உதவியுள்ளார் பிரகாஷ்.

அரசாங்கச் சார்பற்ற அமைப்பு ஒன்றின் மனநல ஆலோசனைப் பிரிவில் பணியாற்றிய அனுபவத்தின் மூலம், பிறருக்குக் கற்றுத்தரும் திறமை தன்னிடமும் உள்ளதைத் தான் கண்டறிந்ததாக ‘எஃப்எம்டி’ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

நேர்முகத் தேர்வுகளில் தொடர்ந்து தோல்விகண்ட நிலையில் ஈராண்டு காலமாக வேலையில்லாமல் திண்டாடினார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் பயின்று மலாய் மொழியில் இளநிலைப் பட்டமும் மனநல ஆலோசனைத் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்ற இவர், இறுதியில் துணைப்பாட ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார்.

மாணவர்கள் இருக்கும் இடங்களுக்குப் பயணம் செய்வதில் தனக்குப் பிரச்சினை ஏதும் இல்லை என்றபோதும் மாணவர்களின் பெற்றோரது நம்பிக்கையைப் பெறுவதே பெரும் சவாலாக இருந்ததெனக் கூறினார் அவர்.

தனது பார்வையற்ற நிலை குறித்து ஐயம் கொண்ட அந்தப் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் தேர்வு முடிவுகளைக் கண்டதும் சந்தேகத்தை விட்டொழித்ததாக அவர் சொன்னார்.

சுமுகமான கற்றல் நடந்தேற, பிரகாஷ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறார்.

“பார்வையற்றவர்கள் பிச்சை எடுக்கவும் திசுத்தாள் விற்கவும்தான் முடியும் என்று பலர் கொண்டுள்ள தவறான எண்ணத்தை உடைத்தெறிவதில் நான் மனநிறைவு அடைகிறேன்,” என்றார் அவர்.

மாணவி தர்ஷிகாவுக்குக் கலந்துரையாடல் வழியாகவும் கேள்வி பதில் முறை வழியாகவும் பாடம் நடத்தும் பிரகாஷ்.
மாணவி தர்ஷிகாவுக்குக் கலந்துரையாடல் வழியாகவும் கேள்வி பதில் முறை வழியாகவும் பாடம் நடத்தும் பிரகாஷ். - படம்: மலேசிய ஊடகம்

இவரிடம் துணைப்பாடம் பயிலும் ‘ஃபோர்ம் 6’ மாணவி ஏ தர்ஷிகா, 20, “பார்வையில்லாமல் அவர் எப்படிக் கற்றுத் தருகிறார் என்று சிலர் கேட்பதுண்டு. ஆனால், ஒருவரது தோற்றத்தைக் கொண்டு அவரின் திறமையை உறுதிசெய்யத் தேவையில்லை,” என்றார்.

குறிப்புச் சொற்கள்