பார்வையைப் பறித்த அமிலவீச்சு; நான்கு இந்தோனீசிய ராணுவ வீரர்களுக்குச் சிறை

பார்வையைப் பறித்த அமிலவீச்சு; நான்கு இந்தோனீசிய ராணுவ வீரர்களுக்குச் சிறை

1 mins read
1612885a-292c-4391-8f14-67e2fa3351a5
இந்தோனீசிய ராணுவ நீதிமன்றத்தில் நான்கு ராணுவ வீரர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: பொதுநல ஆர்வலர் ஒருவர்மீது அமிலவீச்சு நடத்தி அவரது கண்பார்வை பறிபோகக் காரணமாக இருந்த நான்கு ராணுவ வீரர்களுக்கு இந்தோனீசிய நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

புதன்கிழமையன்று (ஜூன் 10) ஒவ்வொரு வீரருக்கும் ஒன்றரை ஆண்டுமுதல் மூன்றாண்டுவரை சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, அந்த வீரர்கள் ஆணவத்துடன் நடந்துகொண்டதாக விமர்சித்தார்.

தண்டனை பெற்ற நான்கு வீரர்களும் இந்தோனீசிய ராணுவத்தின் உத்திபூர்வப் புலனாய்வு முகமையைச் சேர்ந்தவர்கள்.

கடந்த மார்ச் மாதம் அவர்கள் ஆண்ட்ரி யூனுஸ், 27, என்பவர்மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தோனீசிய அரசாங்கம் ராணுவமயமாதலுக்கு எதிராக அவர் நடந்துகொண்டார். தற்போது பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள், 14 அமைச்சுகளிலும் அரசு நிறுவனங்களிலும் பணியாற்றுவதற்கு ஏதுவாக 2025ல் இந்தோனீசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்தை அவர் எதிர்த்தார்.

மார்ச் மாதம் ஜகார்த்தாவில் தமது மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஆண்ட்ரிமீது அமிலம் வீசப்பட்டது. அதன் விளைவாக அவரது ஒரு கண் பார்வை பறிபோனது.

தாக்குதலை நடத்திய வீரர்கள் எந்த ஓர் உத்தரவின்பேரிலும் செயல்படவில்லை என்றும் தன்னிச்சையாக நடந்துகொண்டனர் என்றும் ராணுவ நீதிமன்றத்தில் வாதாடிய அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

“குற்றம் சாட்டப்பட்டவர்களின் செயல்கள், நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கை,” என்று அரசு வழக்கறிஞர் வாசின்டன் மர்பாங் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்