பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் நிலநடுக்கத்தின்போது சில வினாடிகளில் சரிந்த அந்தக் கட்டடத்திற்கு அருகே, அங்கு கூடிய கட்டுமான ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் கதி என்ன ஆயிற்றோ, அவர்கள் இன்னமும் உயிருடன் இருப்பார்களோ என்ற தவிப்பில் கண்ணீருடன் காணப்பட்டனர்.
அங்கு பணியாற்றியக் கட்டுமானப் பணியாளர் ஒருவர், தான் மரணத்திலிருந்து தப்பித்ததை விவரித்தார்.
மியன்மார், தாய்லாந்து நாடுகளைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், அவர் வேலை பார்த்து வந்த கட்டடம், கண்மூடி கண் திறப்பதற்குள் சரிந்து விழுந்ததாக அவர் கூறினார்.
அந்தக் கட்டடம் அரசு அலுவலகங்களுக்காகக் கட்டப்பட்டது என்று கூறிய கின் ஆங் என்ற அந்த ஊழியர், தமது சகோதரர் அங்கு தனது பணியைத் தொடங்க கட்டடத்தினுள் நுழைந்தவுடன் கட்டடம் சரிந்த தாகத் தெரிவித்தார்.
“எனது பணி 1.00 மணிக்கு முடிந்தபோது நான் தண்ணீர் குடிக்க கட்டடத்தை விட்டு வெளியே வந்தேன். அப்பொழுது எனது இளைய சகோதரர் உள்ளே செல்வதைப் பார்த்தேன்,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கின் ஆங் கூறினார். கண்இமைக்கும் நேரத்தில் இவையாவும் நடந்துவிட்டதாக சொன்ன அவர் உணர்வற்ற நிலையில் எதையும் தெளிவாக விவரிக்க முடியவில்லை என்றார் அவர்.