அமெரிக்காவில் பனிப்புயல்; 1,200 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் பனிப்புயல்; 1,200 விமானங்கள் ரத்து

2 mins read
54a9a1aa-30b0-4454-bac0-095fb63450ba
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் கடும் குளிர் காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: அமெரிக்காவில் மோசமான வானிலை தொடர்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) மட்டும் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அங்கு நிலவிய பனிப்புயல் காரணமாக பல வட்டாரங்களில் ஓர் அடிக்கு மேல் பனி தேங்கியிருந்தது. கிழக்கு கடற்கரைப் பகுதிககளிலும் தென் பகுதிகளிலும் கடும் குளிர் பதிவானது.

பனிப் புயலால் நார்த் கரோலினா மோசமாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மைக் காலமாக அமெரிக்காவின் கிழக்குப் பகுதி இரண்டு பெரிய பனிப்புயல்களால் தாக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதிகளில் பல வாரங்களாகக் கடுங் குளிர் பதிவாகி வருகிறது.

வீடுகளிலும் அலுவலகங்களிலும் குளிர் இல்லாமல் இருக்க மக்கள் அதிக அளவில் வெப்பம் மூட்டும் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் மின்சாரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகம்தேவைப்படுகிறது. சீரான மின்சார விநியோகம் செய்வதில் எரிசக்தி நிறுவனங்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கரோலினா மாநிலங்களில் வசிக்கும் தன்னுடைய வாடிக்கையாளர்களை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு டியூக் எனர்ஜி நிறுவனம் கேட்டுக்கொண்டது. இதனால் மின்சாரத் தடை தவிர்க்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணிவரை மின்சாரப் பயன்பாட்டை கவனமாகக் கையாள வேண்டும் என்று நிறுவனம் சொன்னது.

வீட்டு வெப்பநிலையைச் சரியான அளவில் வைக்கவும், துணி துவைக்கும் இயந்திரங்கள், பாத்திரம் கழுவும் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றைக் காலை நேரங்களில் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதேபோல் மின்சார வாகனங்களைப் பிற்பகலுக்குப் பிறகு மின்னூட்டம் செயயும்படி அறிவுறுத்தப்பட்டது.

மிசிசிப்பி, டென்னிசி, ஃபுளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 178,000 வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை மின்சாரம் இல்லாமல் தவித்தன.

இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 1,289 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாக FlightAware தளம் தகவல் வெளியிட்டது.

ஆகமோசமாக சார்லட் டக்லஸ் அனைத்துலக விமான நிலையம் பாதிக்கப்பட்டது. அங்கு மட்டும் கிட்டத்தட்ட 809 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

ஜனவரி 31ஆம் தேதி அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2,500 விமானச் சேவைகள் தடைப்பட்டன.

குறிப்புச் சொற்கள்