நியூயார்க்: அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதி பனிப்பொழிவு மூடியதை அடுத்து ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் தாமதமாகின அல்லது ரத்துசெய்யப்பட்டன.
அதன் விளைவாக விடுமுறை முடிந்து வீடு திரும்பவிருந்த பலரின் பயணத்தில் தடங்கல் ஏற்பட்டது.
கடும் பனிப்புயலால் நியூயார்க், நியூ ஜெர்சி அதிகாரிகள் நெருக்கடி நிலையை அறிவித்தனர். அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மக்கள் சாலைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டனர்.
“நியூயார்க் மக்களின் பாதுகாப்புக்குத்தான் முன்னுரிமை. எனவே பனிப்புயல் தொடரும் இந்த வேளையில் அதிக கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,” என்று நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோகுல் அறிக்கை வெளியிட்டார்.
மத்திய நியூயார்க்கின் சைரெகஸ் என்ற பகுதி தொடங்கி லோங் ஐலண்ட் வரை 15லிருந்து 25 சென்டிமீட்டர் வரை பனி சாலையை மூடியுள்ளது.
நியூயார்க் நகரை ஐந்திலிருந்து பத்து சென்டிமீட்டர் பனி மூடியது. சென்டிரல் பார்க் வட்டாரம் பத்து சென்டிமீட்டர் பனியில் உறைந்தது.
எனினும், கடும் பனிப்பொழிவு கடந்துவிட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். பிற்பகலுக்குள் பனி கரைந்துவிடுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் விமானச் சேவைகள் பலத்த அடிவாங்கின.
தொடர்புடைய செய்திகள்
ஜான் எஃப் கென்னடி அனைத்துலக விமான நிலையம், லாகுவார்டியா விமான நிலையம், நியூவார்க் லிபர்டி அனைத்துலக விமான நிலையம் ஆகியவற்றில் ஏறக்குறைய 9,000 உள்ளூர் விமானச் சேவைகள் ரத்தாகின அல்லது தாமதமாகின.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடட் ஏர்லைன்ஸ், ஜெட்பிளூ ஏர்வேஸ் ஆகிய விமான நிறுவனங்கள் மீண்டும் பயணச் சீட்டுகளுக்குப் பதிவுசெய்தோரிடமிருந்து வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ததாகத் தெரிவித்தன.
பென்சில்வேனியா, மசாசூசட்ஸ் ஆகியவற்றில் உறையவைக்கும் பனிப் புயல் குறித்தும் குளிர்காலம் குறித்தும் அறிக்கைகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டன.
நியூ ஜெர்சியிலும் பென்சில்வேனியாவிலும் வர்த்தக வாகனங்கள் சாலைகளில் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

