ஜோகூர் பாரு: எதிர்வரும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி பல புதுமுகங்களைக் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுக்கு வழிவிடுவதற்காக, தற்போது சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர்ப் பொறுப்பை வகிக்கும் சிலரை அந்தக் கூட்டணி, தேர்தலில் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்காது என்றும் கூறப்படுகிறது.
அம்னோ புதுமுகங்கள்
ஜோகூர் தேர்தலில் அம்னோ கட்சி குறைந்தது 12 புதுமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் ஒருவர், கட்சியின் மாநில இளம்பெண்கள் அணித் தலைவர் ரினா ஃபர்ஹானா அப்துல்லா.
அம்னோவின் மகளிர் அணித் தலைவர் அசியா முகம்மது அரிஃப் சில ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று பேசப்பட்டுவருகிறது. மாநிலத்துக்கான அம்னோவின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினரான திருவாட்டி அசியா கடைசியாக 2013ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார்.
முன்னாள் ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது (பெனுட் தொகுதி), சட்டமன்ற நாயகர் புவாட் ஸர்காஷி (ரெங்கிட் தொகுதி), அப்துல் முத்தாலிப் அப்துல் ரஹிம் (லாயாங் லாயாங் தொகுதி) உள்ளிட்ட தலைவர்கள் வரும் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெங்காரோ தொகுதி
தொகுதிப் பங்கீடு குறித்த பல்வேறு அம்சங்களைப் பற்றித் தற்போது பேசப்பட்டுவருவதாக பாரிசானின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். அந்த அம்சங்களில் ஒன்று, தெங்காரோ தொகுதியாகும்.
பாரிசான் நேஷனல் அத்தொகுதியை மலேசிய இந்தியக் காங்கிரசிடமிருந்து கைப்பற்ற எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மலேசிய இந்தியக் காங்கிரஸ் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாகத் தெங்காரோவை ஆண்டுவருகிறது.
தெங்காரோ தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக கே. ரேவன் குமார் தற்போது பொறுப்பு வகிக்கிறார். ஜோகூருக்கான மலேசிய இந்தியக் காங்கிரஸ் தலைவரான ரேவன் குமார், கெமாலா தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பெர்சாத்துவிலிருந்து மீண்டும் அம்னோவுக்குத் திரும்பிய அல்வியா தாலிப், மீண்டும் என்டாவ் தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று தகவல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். இம்முறை அவர் பாரிசான் நேஷனல் கூட்டணியின் சார்பில் போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.

