தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்‌ரேல் பிணைக்கைதிகள் நால்வரின் உடல்கள் ஒப்படைப்பு

3 mins read
76041b6c-1809-4a85-b88e-3e86692d8ee1
சவப்பெட்டிகளைத் தூக்கி வரும் ஹமாஸ் போராளிகள். பின்னால் உள்ள சுவரொட்டியில் உயிரிழந்த தாய், மகன்கள், தொண்டூழியரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

டெல் அவிவ்: ஒரு தாய், அவரது இரண்டு இளம் மகன்கள் உட்பட நான்கு இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் இஸ்‌ரேலிடம் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) ஒப்படைத்தது.

அந்தத் தாயும் மகன்களும் காசாவில் பிணைக் கைதிகளின் அவலநிலையைக் குறிக்கும் சின்னமாக இஸ்ரேலில் பிரசாரச் சுவரொட்டிகளில் இடம்பெற்றவர்கள்.

உடல்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த உடல் கூராய்வுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

அந்த உடல்கள் ஷிரி பிபாஸ், 33, பிடிபட்டபோது நான்கு வயதும் ஒன்பது மாதமும் ஆக இருந்த அவரது மகன்கள் ஏரியல், கேஃபிர், ஓடேட் லிஃப்ட்ஸ், 84, என்று நம்பப்படுகிறது.

சென்ற 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையில் நடந்த தாக்குதலின்போது அவர்கள் பிணை பிடிக்கப்பட்டனர். 2023 நவம்பரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் கூறியது. ஆனால் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. அவர்களின் மரணத்தை இஸ்ரேல் ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை.

484 நாள்கள் பிணைக்கைதியாக இருந்த ஷிரி பிபாசின் கணவர் யார்டன் பிபாஸ் இம்மாதத் தொடக்கத்தில் உயிருடன் விடுவிக்கப்பட்டார். 2025 ஜனவரி சண்டைநிறுத்த ஒப்பந்தத்தின்கீழ் உயிருடன் விடுவிக்கப்பட்ட 19 இஸ்ரேலியப் பிணைக்கைதிகளில் அவரும் ஒருவர்.

பிபாஸ் குடும்பத்தினரும் அவர்களின் இரண்டு சிறிய செந்நிற முடிகொண்ட குழந்தைகளும் போர்க் காலம் முழுவதும், பிணையாளிகளின் போராட்டச் சின்னமாக மாறிவிட்டனர். வீதிகளில் அவர்களின் முகங்கள் கொண்ட சுவரொட்டிகள் இடம்பெற்றன. குழந்தைகளின் பிறந்த நாள்களில் நினைவஞ்சலிகள் நடத்தப்பட்டன.

ஓடேட் லிஃப்ட்ஸ் ஓய்வு பெற்ற பத்திரிகையாளரும் அமைதி ஆர்வலருமாவர். இஸ்ரேலிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு பாலஸ்தீனர்களை அழைத்துச் செல்லும் இஸ்ரேலியத் தொண்டூழிய அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தவர். அவரது மனைவி யோச்செயின், 85, பிணை பிடிக்கப்பட்டு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

தெற்கு காசாவில் உள்ள இடுகாட்டுக்கு அருகே நடைபெற்ற உடல்கள் ஒப்படைப்பு நிகழ்ச்சியில் மேடையில் கறுப்புத் துணி போர்த்தப்பட்ட நான்கு சவப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஹீப்ரு, ஆங்கில மொழிகளில் செய்திகள் இடம்பெற்ற பதாகைகளும் காணப்பட்டன. முகமூடியணிந்த ஆயுதமேந்திய ஹமாஸ் போராளிகள் நடத்திய நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.

நிகழ்வில் உடல்கள் முதலில் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் இஸ்ரேலிய ராணுவத்திடம் கொடுக்கப்பட்டு, இஸ்ரேலுக்குள் கொண்டு செல்லப்பட்டன.

நான்கு சவப்பெட்டிகளையும் ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணியை எதிர்பார்த்து ஏராளமான மக்கள், பலர் இஸ்ரேலியக் கொடிகளை அசைத்து சாலைகளில் வரிசையாக நின்றனர்.

உடல்கள் ஒப்படைக்கப்பட்ட பின்னர், இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சோக் நாடு முழுவதும் மக்கள் மனமொடிந்து போயுள்ளதாகக் கூறினார். அக்டோபர் 7 அன்று பிணை பிடிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக அரசாங்கத்தின் சார்பில் மன்னிப்புக்கேட்டார்.

“வேதனை... வலி, வார்த்தைகள் இல்லை,” என்று அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் உள்ள பல பிணைக் கைதிகளின் உடல்களை இஸ்ரேலிய ராணுவம் முன்னர் மீட்டது.

குறிப்புச் சொற்கள்