பாத்தாம்: இந்தோனீசியாவின் ரியாவ் தீவிலுள்ள பாத்தாம் தீவுக்கு அருகே நீள்படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மூவரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தஞ்சோங் பினாங்கு தேடல், மீட்புக் குழு தெரிவித்தது.
காணாமல்போன மூவரது சடலங்கள் வெள்ளிக்கிழமை காலை (ஜூன் 27) கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்களது சடலங்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அந்தக் குழு கூறியது.
23 வயது முகம்மது பஹ்ரி குர்னியாவான், 28 வயது ஃபட்லி, 24 வயது ஃபிர்தௌஸ் ஆகியோர் அம்மூவர்.
முதலாமவரின் சடலம் நெனெக் தீவிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள புலு புலாங் தீவில் மீனவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகரிகள் தெரிவித்தனர்.
இரண்டு மணி நேரம் கழித்து, பாஞ்சாங் தீவுக்கு அருகே மீட்புப் பணியாளர்கள் இரண்டாவது நபரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர் . பாஞ்சாங் தீவு, நெனெக் தீவிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கப்பல் கவிழ்ந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 28 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தஞ்சோங் சவு தீவில் மூன்றாமவர் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.
மரணம் அடைந்தவர்களும் வேறு 10 பேரும் ஜூன் 25ல் பிற்பகல் 4 மணியளவில் தீவிலிருந்து செட்டோகொக் தீவுக்குப் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடந்து சில மணி நேரத்திற்குப் பிறகு உள்ளூர்வாசிகள் நான்கு பயணிகளை மீட்டனர். இதற்கிடையே, கவிழ்ந்த நீள்படகைப் பிடித்தபடி ஆறு பேர் உயிர்தப்பினர். இரவு ஒன்பது மணிக்கு அந்தப் படகு, தீவு ஒன்றுக்கு அருகே மிதந்தபோது அந்த அறுவர் கரைக்கு நீந்தினர்.
தொடர்புடைய செய்திகள்
கனமழைக்கு நடுவே எழுந்த பலத்த அலைகள் மோதியதால் அந்தப் படகின் இயந்திரம் திடீரென நின்றுபோனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அளவிற்கு அதிகமான பயணிகள் அப்படகில் இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.