ஜப்பானில் காணாமற்போன அமெரிக்க மாணவரின் சடலம் கண்டெடுப்பு

ஜப்பானில் காணாமற்போன அமெரிக்க மாணவரின் சடலம் கண்டெடுப்பு

2 mins read
e9a8509c-249a-4dbf-baa6-7e2d7eb392db
ஜேம்ஸ் ஹிக்கின்பாதம் என்ற 20 வயது ஆடவரின் உடல், கியோட்டோ நகர மலைப் பகுதியில் கண்டறியப்பட்டதாகத் தகவல் வெளிவந்தது. (இடமிருந்து) ஜேம்ஸ், அவரது பெற்றோர் கீத் ஹிக்கின்பாதம், நான்சி. - படங்கள்: நான்சி ஹிக்கின்பாதம்/ஃபேஸ்புக்

நியூயார்க்: ஜப்பானுக்குக் குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது காணாமற்போன அமெரிக்க மாணவர், கியோட்டோ நகருக்கு அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக அவரது தாயார் சனிக்கிழமை (ஜூன் 6) தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் ஹிக்கின்பாதம் என்ற அந்த 20 வயது ஆடவரின் உடல், மலைப் பகுதியில் கண்டறியப்பட்டதாகத் திருமதி நான்சி ஹிக்கின்பாதம் கூறினார்.

இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றார் அவர்.

“எங்கள் குடும்பம் மனமுடைந்து போயுள்ளது. எங்கள் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலபாமா மாநிலத்தைச் சேர்ந்தவரும், ஆபர்ன் பல்கலைக்கழகப் பொறியியல் மாணவருமான ஜேம்ஸ், கடைசியாக மே 29ஆம் தேதி கியோட்டோ ரயில் நிலையத்திலிருந்து வெளியே சென்றதாகத் தெரிகிறது.

அன்றிரவு அவரது தொலைபேசியும், அதன் இருப்பிடக் கண்காணிப்புச் (Location) சேவைகளும் முடக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதுவரை, ‘Life360’ என்ற செயலியின் மூலம் அவரது நடமாட்டத்தைத் தன்னால் கண்காணிக்க முடிந்தது என்றும் ஆடவரின் தாயார் கூறினார்.

அவர் அருகிலுள்ள மலைப்பாதைக்குச் (Hiking trail) சென்றிருக்கலாம் என நம்பப்பட்டது. தனது மகனுக்கு ‘சிறிது தனிமை தேவைப்பட்டிருக்கலாம்’ எனத் தான் நம்புவதாக நான்சி ஹிக்கின்பாதம் ராய்ட்டர்சிடம் கூறியிருந்தார்.

ஜேம்சின் தம்பி உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததைக் கொண்டாடுவதற்காகவே ஹிக்கின்பாதம் குடும்பத்தினர் ஜப்பானுக்குச் சென்றிருந்தனர்.

ஜப்பானிய அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்டத் தேடுதல் வேட்டை மூன்று நாள்கள் நீடித்தது. இதில் காவல் துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 100 பேர் ஈடுபட்டனர்; அத்துடன் மோப்ப நாய்ப் படைகளும் ஹெலிகாப்டர்களும் தேடுதலுக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அவரைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று சிஎன்என் (CNN) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்சடலம்மாணவர்அமெரிக்கா