லா பாஸ்: பொலிவியா ஆகாயப் படையின் ‘ஹெர்கியூலீஸ்’ விமானம் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.
குறைந்தது 30 பேர் காயமடைந்தனர்.
அந்நாட்டின் மத்திய வங்கியிலிருந்து புதிய பணத் தாள்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த அந்த விமானம், பொலிவியா தலைநகர் லா பாசுக்கு அருகே உள்ள ‘எல் அல்டோ’ நகரில், பரபரப்பான சாலை ஒன்றில் விபத்துக்குள்ளானது.
தொலைக்காட்சி அறிக்கைகள் அந்தத் தகவல்களைத் தெரிவித்தன.
‘சான்ட்டா குரூஸ்’ நகரிலிருந்து புறப்பட்ட அந்த ராணுவ விமானம், ஓடுபாதையிலிருந்து சறுக்கி அருகில் உள்ள சாலையில் விபத்துக்குள்ளானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு மக்கள் கூட்டமாகச் சென்று தரையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டிருந்ததைக் சமூக ஊடகப் பதிவுகள் காட்டின. அவர்களை அங்கிருந்து வெளியேற்ற உள்ளூர் அதிகாரிகள் தண்ணீர்க் குழாய்களையும் கண்ணீர்ப் புகையையும் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தின் தொடர்பில் பொலியாவின் மத்திய வங்கி விரைவில் செய்தியாளர்களிடம் பேசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விபத்தைத் தொடர்ந்து ‘எல் அல்டோ’ அனைத்துலக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய விமான நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும், விபத்துக்குள்ளான விமானம் அதற்குச் சொந்தமில்லை என்றும் அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் ஊடகத்தில் வெளியான காணொளி ஒன்றில், விமானம் கடும் சேதமடைந்திருப்பதைக் காணமுடிந்தது.
விபத்து நேர்ந்த சாலையில், மற்ற வாகனங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

