பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஐஃபில் கோபுரம் உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிறப்பை உடையது.
ஆண்டுதோறும் மில்லியன்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் அக்கோபுரத்திற்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அதில் இருந்தவர்கள் சில மணி நேரத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.
கோபுரத்தின் மூன்று தளங்களில் இருந்தோர் வெளியேற்றப்பட்டனர். ஒரு தளத்தில் செயல்படும் உணவகத்திலிருந்தும் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் வல்லுநர்களும் காவல்துறையினரும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோபுரத்திற்குக்கீழே பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கும் வகையில் பாதுகாப்புப் பகுதி அறிவிக்கப்பட்டது. சில மணி நேரம் கழித்து பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை எனக் கூறப்பட்டது.
1887ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1889ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை கட்டப்பட்ட ஐஃபில் கோபுரத்திற்கு இத்தகைய வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்கள் மிகவும் அரிது.