சிரியாவில் குண்டுவெடிப்பு; அறுவர் பலி

1 mins read
e5de3437-320c-4245-8c4d-3b84eb1135da
சிரியாவின் சயிதா செய்னாப் புனித நகரத்தில் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. - படம்: ஏஎஃப்பி

டமாஸ்கஸ்: சிரியாவின் சயிதா செய்னாப் புனித நகரத்தில் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் சிலர் மாண்டனர் என்றும் மேலும் சிலர் காயமடைந்தனர் என்றும் சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்தது. இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் வியாழக்கிழமையன்று நிகழ்ந்தது.

அந்தப் பகுதியில் ஒரு காரின் முன்புறம் எரிந்துகொண்டிருந்தக் காட்சிகளை சிரியாவின் அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. மேலும் இந்தச் சம்பவத்தில் 6 பேர் இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரிவிப்பதாகவும் அது கூறியது.

சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் ராய்ட்டர்சிடம், வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி இரவு 10.30 மணி) பலத்த சத்தம் கேட்டதாகவும் பாதுகாப்புப் படையினர் விரைந்துவந்து அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்தனர் என்றும் தெரிவித்தார்.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாரத்தில் சயிதா செய்னாப் புனித நகரத்தில் குண்டுவெடிப்பது இது இரண்டாவது முறை. முன்னதாக செவ்வாய்க்கிழமை இதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

அந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. செவ்வாய்கிழமை நடந்த குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிய தேசிய அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்