மாஸ்கோ உணவகத்துக்கு அருகே குண்டுவெடிப்பு: மூவர் மரணம்

மாஸ்கோ உணவகத்துக்கு அருகே குண்டுவெடிப்பு: மூவர் மரணம்

2 mins read
ec0fe2dc-a99d-4ca0-895f-0a9b50ba4f1c
மாஸ்கோ நகரின் மத்தியப் பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில் அமைந்துள்ள பழைய பலமாடிக் கட்டடங்களில் ஒன்றில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஓர் உயர்தர உணவகத்துக்கு அருகில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) இரவு குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் குறைந்தபட்சம் 21 பேராவது படுகாயமடைந்தனர் என்று அந்நாட்டு காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

மாஸ்கோ நகரின் மத்தியப் பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில் அமைந்துள்ள பழைய பலமாடிக் கட்டடம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்தது. அங்கு இயங்கிவரும் பால்ஸி ராஸி என்ற உயர்தர இத்தாலிய உணவகத்தின் அருகில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பெண் அந்த உணவகத்துக்குள் வலுக்கட்டாயமாக முந்தியடித்துக்கொண்டு நுழைய முயற்சி செய்துள்ளார். அப்போது அங்குப் பணியில் இருந்த பாதுகாவல் அதிகாரி ஒருவர் அப்பெண்ணை உடனடியாகத் தடுத்து நிறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அங்குச் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில், குண்டை வைத்திருந்த பெண், அவரைத் தடுத்து நிறுத்திய பாதுகாவல் அதிகாரி, உணவகத்தின் வாடிக்கையாளர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இத்தகவலை ரஷ்யாவின் பயங்கரவாத எதிர்ப்பு ஆணையம் உறுதிப்படுத்தியது.

குண்டுவெடிப்பில் காயமடைந்தோர் வெவ்வேறான தீவிரத்தன்மை கொண்ட காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று காவல்துறை குறிப்பிட்டது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாகப் புலனாய்வு அதிகாரிகளும் அவசரகாலச் சேவைப் பிரிவினரும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்