நைஜீரிய பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: ஐவர் கொல்லப்பட்டனர்

2 mins read
1c2a1946-e71a-4c67-9d78-597f5594b710
போர்னோ மாநில சிறப்பு மருத்துவமனையில் அவசர உதவி அதிகாரி காயமுற்றோருக்காக காத்து நிற்கிறார். புதன்கிழமை (டிசம்பர் 24) நடந்த குண்டு வெடிப்பில் காயமுற்றோர் அங்கு அழைத்து வரப்பட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

மைடுகுரி/நைஜீரியா: நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலப் பள்ளிவாசலில் புதன்கிழமை (டிசம்பர் 24) மாலைநேரத் தொழுகையின்போது தற்கொலைத் தாக்குதல் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

போர்னோ மாநிலத்தின் தலைநகர் மைடுகுரி ஆகும். தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை. அங்குள்ள அல்-அடும் பள்ளிவாசலில் நடந்த சம்பவத்தில் ஐவர் மரணமடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ள பலர், மைடுகுரி பல்கலைக்கழகப் பயிற்சி மருத்துவமனைக்கும், மாநில சிறப்பு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்பகுதியைச் சுற்றி யாரும் வரமுடியாமல் தடுப்பகளை ஏற்படுத்தி வெடிகுண்டு செயலிழப்புக் குழுக்கள் ஆய்வுகள் நடத்திவருகின்றன எனவும் காவல்துறையின் அவசரகால விசாரணைப் பிரிவு அதன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மாநில அரசாங்க ஆணைய அதிகாரி கென்னத் டாசோ கூறினார்.

அங்குள்ள குடியிருப்பாளர்கள் அமைதியாக ஆனால் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நைஜீரியாவின் வடகிழக்கு வட்டாரங்களில் ‘போக்கோ ஹராம்’ போன்ற இஸ்லாமியப் போராளிகள் பல குழுக்களாக பிரிந்தாலும் அவர்கள் பல்லாண்டுகளாக ஆட்சியை எதிர்த்து ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். பொதுமக்கள், பள்ளிவாசல்கள், சந்தைகள் என அவர்கள் குறிவைத்து வன்முறைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போர்னோ மாநில ஆளுநர் பாபாகானா சுலும், தாக்குதலை “மனிதத் தன்மையற்ற செயல்,” என்று வன்மையாகக் கண்டித்தார். விழாக் காலம் என்பதால் பொது இடங்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் அதிக விழிப்புடன் இருக்கும்படி அவர் வலியுறுத்தினார்.

வழிபாடு நடக்கும்போது தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளோர், காயமடைந்தோர் குடும்பங்களுக்கு அவர் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், வடமேற்கில் உள்ள கட்சினா மாநிலத்தில் உள்ள பள்ளிவாசலிலும் வீடுகளிலும் துப்பாக்கிக்காரர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 50பேர் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் அதிகாரிகளும் குடியிருப்பாளர்களும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்