சிட்னி: போண்டாய் கடற்கரையில் இரண்டு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னர் சில நாட்டு வெடிகுண்டுகளையும் டென்னிஸ் பந்தில் அடைத்த வெடிகுண்டையும் மக்கள் கூட்டத்தில் வீசியுள்ளனர்.
இருப்பினும் அந்த வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை என்று ஆஸ்திரேலியக் காவல்துறை நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 22) தெரிவித்தது.
டிசம்பர் 14ஆம் தேதி, போண்டாய் கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தில் யூதர்கள் ஈடுபட்டனர். அப்போது இரண்டு துப்பாக்கிக்காரர்கள் அங்குக்கூடியிருந்த மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அந்தத் தாக்குதலில் 15 பேர் மாண்டனர். பலர் காயமடைந்தனர். 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நால்வர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
துப்பாக்கிக்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காவல்துறையின் விசாரணையில் உள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் மாண்ட பயங்கரவாதி குறித்த சில தகவல்களைக் காவல்துறை வெளியிட்டுள்ளது. 50 வயதான சாஜித் அக்ரமிடம் 6 துப்பாக்கிகள் இருந்துள்ளன.
மற்றொரு துப்பாக்கிக்காரர் சாஜித்தின் மகன் நவீத் அக்ரம். 24 வயது நவீத்மீது பயங்கரவாதம் கொலை உள்ளிட்ட 59 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்துவது குறித்துப் பல மாதங்களாகப் பயங்கரவாதிகள் இருவரும் திட்டமிட்டுள்ளனர். தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு நாள்கள் முன்னர் அவர்கள் போண்டாய் கடற்கரைக்குச் சென்று திட்டங்களைச் செய்துமுடிப்பது குறித்துப் பேசியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பித்த ஆவணங்களில் இரண்டு பயங்கரவாதிகளும் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்ட படங்கள் இருந்தன. நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கிராமப் பகுதியில் அவர்கள் பயிற்சி செய்துள்ளனர்.
துப்பாக்கிக்காரர்களின் கைப்பேசியில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு காணொளியும் இருந்தது. அது அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட காணொளி. அதில் இருவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடிக்கு முன் அமர்ந்து தாக்குதல் நடத்தியதற்கான காரணங்களைக் கூறியிருந்தனர்.
டிசம்பர் 14ஆம் தேதி மாலை 5 மணி வாக்கில் அவர்கள் இருவரும் போண்டாய் கடற்கரைக்குச் சென்றனர். அப்போது அவர்களது வாகனத்தில் மூன்று துப்பாக்கிகள், மூன்று நாட்டு வெடிகுண்டுகள், ஒரு டென்னிஸ் பந்து வெடிகுண்டு மற்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த வெடிகுண்டு ஆகியவை இருந்தன.
மன்னிப்புக் கேட்ட அல்பனீஸ்
போண்டாய் கடற்கரை தாக்குதல் ஆஸ்திரேலியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துப்பாக்கிகளுக்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிராக நடக்கும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
இந்நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், போண்டாய் சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) போண்டாயில் நடந்த அஞ்சலியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அப்போது திரு அல்பனீசை அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

