போண்டாய் கடற்கரை களையிழந்து காணப்பட்டது

1 mins read
1e1c7312-a2c5-45e9-ae9e-8804007ed5b8
கிறிஸ்துமஸ் நாளன்று போண்டாய் கடற்கரையில் காவல்துறையினர் பாதுகாப்பை வலுப்படுத்தியிருந்தனர். - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பிரபலமான போண்டாய் கடற்கரை டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் நாளில் களையிழந்து காணப்பட்டது.

ஒரு வாரத்திற்கு முன்பு அங்கு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

அந்தத் துயரத்திலிருந்து மக்கள் இன்னமும் மீளாததால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

ஒரு சில இடங்களில் சிறிய கிறிஸ்துமஸ் மரம் காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் சிலர் மரத்தின் அருகில் நின்று படமெடுத்துக் கொண்டனர்.

ஆனால் வழக்கமான உள்ளூர் மக்களின் ஆரவாரமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

போண்டாய் கடற்கரையில் காவல்துறையின் சுற்றுக்காவல் தீவிரமாக இருந்தது.

“இது, ஒரு துயரமான சம்பவம். எல்லாரும் நடந்ததை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன்,” என்று பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி மார்க் கான்ராய் ராய்ட்டர்சிடம் கூறினார்.

கடந்த டிசம்பர் 14ஆம் தேதி யூதர்கள் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாடியபோது அவர்களை நோக்கித் துப்பாக்கிக்காரர்களான தந்தையும் மகனும் சரமாரியாகச் சுட்டனர்.

அந்தச் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி உரிமங்களுக்குக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.

“கிறிஸ்துமஸ் பண்டிகை நாளன்று நல்ல சூழ்நிலை இல்லை. அனைவரும் சோகமாக இருந்தனர். ஒரு சிலர் கடற்கரையில் கூடி இருந்தனர்,” என்று உயிர்க்காப்பு சுற்றுக்காவல் படையின் தலைவர் தாமஸ் ஹாக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்