போண்டாய் துப்பாக்கிச்சூடு: நாடளவில் துக்கம் அனுசரிக்கும் ஆஸ்திரேலியா

2 mins read
da54e7f2-bf36-4d5b-8a13-3a6e06bb0183
‘Light Will Win’ என்னும் கருப்பொருளைக் கொண்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி இரண்டு துப்பாக்கிக்காரர்கள் போண்டாய் கடற்கரையில் கூடியிருந்த மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 15 பேர் மாண்டனர். பலர் காயமடைந்தனர். இது ஆஸ்திரேலிய மக்களை அதிர்ச்சியில் தள்ளியது.

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததில்லை.

இந்நிலையில், மாண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடளவில் வியாழக்கிழமை (ஜனவரி 22) மாலை 7.01 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், ஆஸ்திரேலியத் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வீடுகளின் சன்னல்களிலும் வெளிப்புறங்களிலும் மெழுகுவர்த்தி ஏத்த ஆஸ்திரேலியர்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்திலிருந்து உயிர்தப்பியவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், அரசியல்வாதிகள், சமூகத் தலைவர்கள் எனப் பலதரப்பினர் சிட்னி ஓப்ரா ஹவுசில் துக்கம் அனுசரிக்கின்றனர்.

‘Light Will Win’ என்னும் கருப்பொருளைக் கொண்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இனி போன்டாய் கடற்கரை வெறும் கடற்கரையாக மட்டும் பார்க்கப்படாது. இது அமைதி, அனைவரையும் உள்ளடக்கிய சமூகம், பாதுகாப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் இடமாக இருக்கும்,” என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் தெரிவித்தார்.

பிரதமர் அல்பனீஸ் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின்போது உரையாற்றவார் என்று தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 87 வயது நபர், வயதான தம்பதி, 10 வயது சிறுமி மட்டில்டா உள்ளிட்டோர் மாண்டனர்.

துப்பாக்கிச்சுடு நடக்கும் போது ஆபத்து எனத் தெரிந்தும் சிலர் தங்களது உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களுக்கு உதவினர். குறிப்பாக அகமது அல் அகமது என்னும் நபர் துப்பாக்கிக்காரர் ஒருவரை மடக்கிப் பிடித்து துப்பாக்கியைப் பிடுங்கினார்.

போண்டாய் சம்பவத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்