மேரிலாண்ட்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற்ற நிபுணத்துவ பேஸ்பால் விளையாட்டின்போது ஐந்து வயது சிறுவன் உயிரிழந்தான்.
‘பௌன்ஸ் ஹௌஸ்’ எனப்படும் குழந்தைகள் விளையாடும் காற்று ஏற்றப்பட்ட வீடு ஒன்று பலத்த காற்றினால் வானில் பறந்துசென்றதைத் தொடர்ந்து அச்சம்பவம் நடந்தது. அதில் குழந்தைகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விளையாட்டு வீடு காற்றில் 15 முதல் 20 அடி வரை பறந்தபோது, அதிலிருந்த குழந்தைகள் ‘ரீஜன்சி பர்னிச்சர்’ விளையாட்டரங்கில் உள்ள பேஸ்பால் திடலில் விழத் தொடங்கினர்.
அடையாளம் காணப்படாத அந்த ஐந்து வயது சிறுவன், வாஷிங்டனில் உள்ள குழந்தைகள் தேசிய மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டான்.
இருப்பினும், அவன் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது குழந்தையும் அதே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுக்காக சிகிச்சை பெற்றது.
‘வால்டோர்ஃப்’ பகுதியில், ‘புளூ கிராப்ஸ்’ அணிக்கும், ‘யோர்க் ரெவலியூஷன்’ அணிக்கும் இடையிலான ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அந்தச் சம்பவம் நடந்தது.
பேஸ்பால் ஆட்டங்களின்போது அந்த விளையாட்டு வீடு வழக்கமாக குழந்தைகளுக்காக ஒரு பகுதியில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், 2000ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையே, உலகம் முழுதும் காற்று தொடர்பான விளையாட்டு வீட்டுச் சம்பவங்களில் குறைந்தது 479 பேர் காயமடைந்துள்ளதாகவும் 28 மரணங்கள் நேர்ந்துள்ளதாகவும் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

