சீனாவின் ஜியாங்சு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் 10,000 யுவான் (1,822 வெள்ளி) மதிப்புள்ள 10 கிராம் தங்கக் கொட்டையைத் தவறுதலாக விழுங்கினான்.
இதில், ஆச்சரியப்படும் தகவல் என்னவென்றால், அச்சம்பவத்தை அறிந்த அவரது தாய் அச்சிறுவனை வெளியே மலம் கழிக்க வேண்டாம் என அறிவுறுத்தியதோடு, அவனது கழிவு மிகவும் விலை மதிப்பானது எனக் கூறியுள்ளார்.
அந்தத் தாய் ‘த டான்’ நாளிதழுக்கு அளித்த நேர்காணல், சீனச் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.
அக்டோபர் 22ஆம் தேதி, சிறுவன் தங்கத்தை அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறுதலாக விழுங்கியதாகவும் அந்தத் தகவலை தன்னிடன் அவர் கூறியபோது தாம் அதை விளையாட்டாகச் சொல்கிறார் என எடுத்துக்கொண்டதாகவும் அச்சிறுவனின் தாய் கூறினார்.
சிறுவனிடம் விசாரித்தபோது அது உண்மைதான் என்பதை அறிந்தாலும், அந்தத் தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவில்லை.
“உறவுக்காரச் சிறுமி ஒருவர் இதேபோன்று காசை விழுங்கினார். மருத்துவமனை அழைத்துச்சென்றபோது அது மலத்தோடு வந்துவிடும், பயப்பட வேண்டாம் என மருத்துவர்கள் கூறினர். அதுபோல, தங்கக் கொட்டையும் கழிவோடு வந்துவிடும் என நான் எண்ணினேன்,” என்றார் அந்தத் தாய்.
ஐந்து நாள்களுக்குப் பிறகு தங்கம் கிடைக்காததால் மகனை மருத்துவமனை அழைத்துச் சென்றதாகவும் தங்கத்தை மருத்துவர்கள் மீட்டுத்தந்ததாகவும் அவர் கூறினார்.
மருத்துவர்கள் எவ்வாறு தங்கத்தை அச்சிறுவனின் வயிற்றிலிருந்து எடுத்தனர் போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

