கோலாலம்பூர்: மலேசியாவின் திரங்கானு மாவட்டத்தில் வாகனம் ஓட்டிய 16 வயது சிறுவனைக் காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர்.
கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8) மாலை 6.30 மணி அளவில் கோலா திரங்கானு நகரில், கார் ஒன்று சந்தேகத்துக்குரிய வகையில் சென்றுகொண்டிருந்ததை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் கவனித்தனர்.
காரை நிறுத்துமாறு ஓட்டுநருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றார்.
காவல்துறையினர் தங்கள் வாகனங்களில் அந்த காரைத் துரத்தினர்.
தப்பித்துச் செல்லும் நோக்கில் காவல்துறை வாகனம் மீது அந்த கார் மோதியது. காரை அந்த ஓட்டுநர் அபாயகரமான முறையில் ஓட்டியதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
இறுதியில், துப்பாக்கியைக் காட்டி எச்சரிக்கை விடுத்த பிறகே, அந்த சிறுவன் காரை நிறுத்தினான்.
உரிமம் இல்லாமல் கார் ஓட்டியதற்காக அவன் கைது செய்யப்பட்டான்.
அவன் ஒரு மாணவன் என்றும் தமது சகோதரரின் அனுமதி இல்லாமல் அவரது காரை அவன் ஓட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக அவனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. அத்துடன், மீண்டும் அக்குற்றத்தைப் புரியக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் சிறுவன் விடுவிக்கப்பட்டான்.
இந்த விவகாரம் குறித்து சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அரசு ஊழியரை அவரது கடமையைச் செய்ய விடாமல் இடையூறு விளைவித்தது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.