குச்சிங்: வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாது 16 வயது சிறுவன் ஒருவன் கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் ஐவர் மாண்டனர்.
இந்தச் சம்பவம் மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் தலைநகரான குச்சிங்கில் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 14) நிகழ்ந்தது.
சிறுவன் ஓட்டிய காரில் பயணம் செய்துகொண்டிருந்த இரண்டு பதின்மவயதினர் உயிரிழந்தனர்.
அந்தக் காரில் இருந்த சிறுமிக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிற்பகல் 12.50 மணி அளவில் விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
காரின் கட்டுப்பாட்டை அந்தச் சிறுவன் இழந்ததை அடுத்து, எதிர்திசையில் சென்று கொண்டிருந்த சாலைக்குள் வாகனம் சென்றது.
அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த இரண்டு கார்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதியது.
காரை ஓட்டிய சிறுவனுக்குக் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறுவன் ஓட்டிய வாகனம் மோதிய காரில் இருந்த இருவர் மாண்டுவிட்டதாக சரவாக் காவல்துறை தெரிவித்தது.
விபத்துக்குள்ளான இன்னொரு காரின் ஓட்டுநர் உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டிகளில் ஒருவர் உயிரிழந்தார்.
இன்னொருவர் உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.