கம்பத்தில் சிறுவனைக் கட்டிவைத்து அடித்த மக்கள்: இருவர் கைது

கம்பத்தில் சிறுவனைக் கட்டிவைத்து அடித்த மக்கள்: இருவர் கைது

1 mins read
fa366e64-1bc0-4e09-a0c2-2792d2437141
காணொளியில் சிறுவனை ஊர்மக்கள் தாக்குவதைக் காண முடிகிறது. இதனால் சிறுவனின் முதுகு முழுக்க தழும்புகள் இருந்தன. - படங்கள்: இணையம்

பெய்ஜிங்: திருடன் என்ற சந்தேகத்தில் 10 வயதுச் சிறுவனைத் தொலைபேசிக் கம்பம் ஒன்றில் கட்டிப்போட்டு ஊர்மக்கள் மின் கம்பிவடங்களால் அடித்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

இதன் தொடர்பில் மாது ஒருவரும் அவரின் மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘வெய்போ’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றில், சிறுவனின் முதுகு முழுக்க நீண்ட சிவப்புநிறத் தழும்புகள் இருப்பதைக் காண முடிந்தது.

இந்தக் காணொளி இதுவரை 1.89 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

சிறுவன் 650 யுவான் (S$121) திருடியதாக எண்ணி, ஊர்மக்கள் சிறுவனை இவ்வாறு கட்டிப்போட்டு அடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

சிறுவனின் பெற்றோர் மணவிலக்கு பெற்றுள்ளனர் என்றும் தாத்தாவின் பராமரிப்பில் வளரும் அந்தச் சிறுவன் திருடும் பழக்கமுடையவன் என்றும் காணொளியில் கூறப்பட்டது.

சிறுவன் மருத்துவமனைக்குக் காயங்களுடன் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆதாரமின்றிச் சிறுவனைத் தண்டித்ததற்கு இணையவாசிகள் பலர் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பெயரில் இப்படிப்பட்ட வன்முறையா என்று கேள்வி எழுப்பினார் ஒருவர். காவல்துறையை அழைத்திருந்தால் சிறுவன் இத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கமாட்டான் என்றார் மற்றொருவர்.

குறிப்புச் சொற்கள்