படுகொலை செய்த சிறுவன் தாத்தா, பாட்டி பாசத்தில் வளர்ந்தவன்

கேலிக்கு ஆளாகியதால் நிகழ்ந்த தாய்லாந்து துப்பாக்கிச்சூடு

படுகொலை செய்த சிறுவன் தாத்தா, பாட்டி பாசத்தில் வளர்ந்தவன்

2 mins read
10a37baa-724b-4db5-8347-4a7848d1f02a
துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவனின் அத்தை சபாங் சாய்கொர்ன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பேங்காக்: தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் 7 பேரைக் கொன்று அதிர்ச்சியை ஏற்படுத்திய 14 வயதுச் சிறுவன், தனது தாத்தா பாட்டியின் அளப்பரிய அன்பிலும் பாசத்திலும் வளர்ந்த அமைதியான சுபாவம் கொண்டவன் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 7 அன்று நடந்த இச்சம்பவத்தில், அச்சிறுவன் முதலில் வீட்டில் இருந்த தனது தாத்தாவையும் பாட்டியையும் தனது தாத்தாவின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். 

பின்னர் பள்ளிக்குச் சென்று, ஆசிரியர்கள் இருவரையும் ஊழியர்கள் மூவரையும் சுட்டுக்கொன்றான். இறுதியில் தன்னையே சுட்டுக்கொண்ட அச்சிறுவன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தான். இத்தாக்குதலில் 23க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அமைதியான சுபாவம்

அச்சிறுவனின் அத்தை சபாங் சாய்கொர்ன் தெரிவிக்கையில், “அவன் யாருடனும் அதிகம் பழகமாட்டான்; நண்பர்களும் குறைவு. எப்போதும் அமைதியாகவே இருப்பான்,” என்றார்.

தாத்தா பாட்டி உயிரிழந்ததை முதன்முதலில் கண்டறிந்த கிராமத் தலைவர் பன்னதோர்ன் தெம்ரக், “வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தாத்தா சமையலறைக்கு அருகில் தலையின் பின்புறம் சுடப்பட்ட நிலையிலும், பாட்டி படுக்கையறையில் தூங்குவது போல் சுடப்பட்ட நிலையிலும் சடலமாகக் கிடந்தனர். சிறுவயதிலிருந்தே அவனை மிகுந்த அன்போடு வளர்த்தவர்கள் அவர்கள்,” என வேதனையுடன் தெரிவித்தார்.

அச்சிறுவனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர் சுரின் ஆதாம் கூற்றுப்படியும், அவன் மிகக் குறைந்த அளவே பேசக்கூடிய அமைதியான சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.

பள்ளியில் நடந்த துன்புறுத்தல்

அச்சிறுவன் எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினான் என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், அவன் பள்ளியில் பிற மாணவர்களால் தொடர்ந்து கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள், சில மாணவர்கள் அவனைப் பள்ளிக் கழிப்பறைக்குள் பூட்டி வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தாய்லாந்துக் கல்வி அமைச்சர் பிரசெர்ட் ஜந்தராருவாங்தொங், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசியாவில் துப்பாக்கிப் புழக்கம் அதிகமாக உள்ள நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்