வான்கூவர்: உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் பிரேசில், சுவிட்சர்லாந்து, மொரோக்கோ ஆகிய அணிகள் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறின.
முதல் சுற்றுப் போட்டிகளில், சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் கனடாவை வென்று, ‘பி’ பிரிவில் ஏழு புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
சுவிட்சர்லாந்து அணி தான் ஆடிய மூன்று ஆட்டங்களில் இரண்டில் வெற்றியும் ஒன்றில் சமநிலையும் கண்டது. ஒரு வெற்றி, ஒரு சமநிலை, ஒரு தோல்வி என நான்கு புள்ளிகளுடன் கனடா இரண்டாம் நிலையைப் பிடித்தது.
மூன்றாம் இடத்தில் உள்ள போஸ்னியாவைவிட கோல் கணக்கில் கனடா முன்னிலை பெற்றதால் அதுவும் அடுத்த சுற்றுக்குச் செல்கிறது. அவ்வணி உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெற்றது இதுவே முதன்முறை.
மூன்று ஆட்டங்களில் ஒரே ஒரு புள்ளியைப் பெற்ற கத்தார் அணி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது.
ஐந்துமுறை உலகக் கிண்ண வெற்றியாளரான பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வென்று ஏழு புள்ளிகளுடன் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்தது. மொரொக்கோ அணியும் ஏழு புள்ளிகள் பெற்றாலும் கோல் எண்ணிக்கையில் பிரேசிலைவிட பின்தங்கியதால் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இரு குழுக்களும் இரு ஆட்டங்களில் வெற்றியும் ஒன்றில் சமநிலையும் கண்டன.
மூன்றாம் நிலை குழுக்கள்
மூன்றாம் நிலையில் உள்ள ஸ்காட்லாந்து, அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுமா என்பது பன்னிரண்டு பிரிவுகளுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்த பிறகுதான் தெரியும்.
ஏனெனில் முதல் சுற்றில் அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடம் பிடிக்கும் இரு அணிகள் அடுத்த 32 அணிகள் மோதும் இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெறும்.
அதன்படி 12 பிரிவுகளில் இருந்து 24 அணிகளும், மூன்றாம் நிலையில் வரும் எட்டு அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும். ஆயினும், அனைத்துப் பிரிவுகளிலும் மூன்றாமிடம் பிடித்த அணிகளின் புள்ளிகள், கோல் எண்ணிக்கை போன்றவை கருத்தில்கொள்ளப்பட்டு, அவற்றில் சிறந்த எட்டு அணிகள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வுசெய்யப்படும்.

