ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பிரேசிலைச் சேர்ந்த மலையேறி ஒருவர் எரிமலையிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
அவரை மீட்கும் பணிகள் மெதுவாக நடந்ததாக அவரின் குடும்பத்தார் சாடுகின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்த ஜுலியானா மரின்ஸ், 26, எனும் மாதின் உடலில் வியாழக்கிழமை (ஜூன் 26) பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. வ்ர் உயிரிழந்த நேரத்தைக் கண்டுபிடிக்கப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
திருவாட்டி மரின்ஸ், கடந்த சனிக்கிழமை (ஜூன் 21) இந்தோனீசியாவின் இரண்டாவது ஆகப் பெரிய எரிமலையான ரின்ஜானி மலையில் காணாமற்போனார். அந்த மலை லொம்பொக் தீவில் உள்ளது.
திருவாட்டி மரின்சின் அசைவில்லா உடலை அதிகாரிகள் வானூர்தி மூலம் அடையாளம் கண்டனர். மோசமான வானிலை காரணமாக அவரை வெளியேற்றும் பணியில் இடையூறு ஏற்பட்டது.
ஒருவழியாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) மீட்புப் பணியாளர்கள் அவரின் உடல் இருந்த இடத்துக்குச் சென்றனர். அதற்கு மறுநாள் திருவாட்டி மரின்சின் உடலை அங்கிருந்து வெளியேற்றினர்.
திருவாட்டி மரின்சை சில மணிநேரத்தில் மீட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று அவர் குடும்பத்தார் கூறுகின்றனர்.
“மீட்புப் பணியாளர்கள் ஜுலியானாவை மிகவும் அலட்சியமாக நடத்தினர். கணிக்கப்பட்டிருந்த ஏழு மணிநேரத்துக்குள் மீட்புக் குழு அவரிடம் சென்றிருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார்,” என்று திருவாட்டி மரின்சின் குடும்பம் புதன்கிழமை (ஜூன் 25) இன்ஸ்டகிராமில் பதிவிட்டது. அப்பதிவு இடம்பெறும் கணக்கை இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் தொடர்ந்துள்ளனர் (followers).