தலையில் பாய்ந்த துப்பாக்கிக்குண்டுடன் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்ற இளையர்

தலையில் பாய்ந்த துப்பாக்கிக்குண்டுடன் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்ற இளையர்

1 mins read
நான்கு நாள்களுக்குப் பிறகே தெரிந்தது!
d1bf4aa7-6df6-4958-958b-e074fa1f4658
மேத்யூசின் தலையில் பாய்ந்த 9 மி.மீ. துப்பாக்கிக் குண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. - படங்கள்: ஊடகம்

ரியோ டி ஜெனிரோ: தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்ததுகூடத் தெரியாமல் நான்கு நாள்களாகப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் திளைத்தார், பிரேசிலைச் சேர்ந்த மேத்யூஸ் ஃபச்சியோ எனும் 21 வயது இளையர்.

புத்தாண்டிற்கு முதல்நாள் கடற்கரையில் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார் மேத்யூஸ். அப்போது, அவரது தலையை எதுவோ தாக்கியது. எவரேனும் சிறு கல்லை எறிந்திருக்கலாம் என நினைத்து அவர் விட்டுவிட்டார்.

அதன்பின்னும் தொடர்ந்து நான்கு நாள்களாகப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மூழ்கினார் மருத்துவக் கல்வி பயின்றுவரும் மேத்யூஸ்.

ஐந்தாம் நாளில் அவரால் தமது வலக்கையைத் தூக்க முடியவில்லை. அதற்காக மருத்துவமனைக்குச் சென்றபோதுதான், அவரது தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.

பின்னர் மருத்துவர்கள் இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, அந்த 9 மில்லிமீட்டர் துப்பாக்கிக் குண்டை அகற்றியதாக ‘டெய்லி மெயில்’ செய்தி தெரிவிக்கிறது.

“துப்பாக்கிக் குண்டு இன்னும் சில மில்லிமீட்டர் ஆழமாகப் பாய்ந்திருந்தால் பாதிப்பு கடுமையாக இருந்திருக்கும். மேத்யூசின் ஒருபக்க உடல் செயலிழந்து போயிருக்கக்கூடும்,” என்று அவருக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் மருத்துவரான ஃபிலாவியோ ஃபல்கோமெட்டா கூறினார்.

இன்னும் 20 முதல் 30 நாள்களில் மேத்யூஸ் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

தமக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை, ‘ஜர்னல் நேஷனல்’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மேத்யூஸ் பகிர்ந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மேத்யூஸ்மீது துப்பாக்கியால் சுட்டது யார் என்பதைக் கண்டறிய காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்