கோலாலம்பூர்: மலேசியாவின் ஓய்வூதிய நிதி வாரியத்திடமிருந்து எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் பெற்ற 4 பில்லியன் ரிங்கிட் கடனில் முறைகேடு செய்ததாகவும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அந்நாட்டில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.68 பில்லியன்) இழப்பீடு வழங்க வேண்டும் என்று மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்போது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அகமது ஃபைரூஸ் ஸைனுல் அபிதீன், நஜிப் 1.18 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 120 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகிய தொகைகளை எஸ்ஆர்சி நிறுவனத்துக்கு வழங்கப் பொறுப்பேற்க வேண்டும் என்று கண்டறிந்தார்.
இதில் 1.18 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது எஸ்ஆர்சி முதலீடு செய்யவிருந்து இழந்த தொகையாகும். 120 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது நஜிப் செய்த நம்பிக்கை துரோகத்துக்கான இழப்பீடாகும்.
2021ஆம் ஆண்டு மே மாதத்தில் எஸ்ஆர்சி நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கில், நஜிப் தமது அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தியதோடு, நிறுவனத்தின் நிதியைத் தனிப்பட்ட லாபத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 31) தமது தீர்ப்பை வழங்கிய நீதிபதி அகமது ஃபைரூஸ், நஜிப் அப்போதைய பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகிய பதவிகளைப் பயன்படுத்தி முறையாகத் திட்டமிட்டு அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
அனைத்து அதிகாரங்களையும் ஒரே நபருக்கு வழங்கியதன் மூலம், நிறுவனத்தின் நிர்வாகத்தை நஜிப் சீர்குலைத்துவிட்டார் என்றும் எந்தவொரு தனிநபரும் கட்டுப்பாடற்ற அதிகாரத்தைக் கொண்டிருக்கக்கூடாது என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த வழக்கின் தொடக்கத்தில் நஜிப்புடன் சேர்த்து எஸ்ஆர்சியின் முன்னாள் இயக்குநர்கள் பலரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இருப்பினும், பின்னர் ஆறு பெயர்கள் நீக்கப்பட்டு, நஜிப் மற்றும் நிக் ஃபைசல் அரிஃப் கமில் ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளாகத் தக்கவைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், நஜிப் அந்த முன்னாள் இயக்குநர்களை ‘மூன்றாம் தரப்புப் பிரதிவாதிகளாக’ இந்த வழக்கில் சேர்த்திருந்தார். ஆனால், அவர்களுக்கு எதிராக நஜிப் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

