மலேசியாவில் லஞ்ச அதிகாரிகள் கைது: 36 வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை

2 mins read
a38743d4-2483-4d9b-b508-a5e52d21cfca
கைது செய்யப்பட்ட அதிகாரிகள் வெளிநாட்டு ஊழியர்கள் பலரிடம் லஞ்சம் வாங்கியதாக விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: ஊடகம்

கோலாலம்பூர்: லஞ்சம் வாங்கியதாக 11 அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் 3.1 மில்லியன் ரிங்கிட் வைக்கப்பட்டிருக்கும் 36 வங்கிக் கணக்குகளை முடக்க மலேசிய லஞ்ச ஒழிப்புத் துறை விண்ணப்பம் செய்துள்ளது.

நாட்டில் லஞ்ச, ஊழலை ஒடுக்க ‘ஆப்பரேஷன் பிளீச்’ என்னும் சிறப்பு நடவடிக்கை ஒன்றை மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் (MACC) புலனாய்வுப் பிரிவு எடுத்து வருகிறது.

அந்த நடவடிக்கையின்கீழ் அண்மையில் 11 அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற அதிகாரி.

வெளிநாட்டு ஊழியர்களை முறைப்படுத்துவதற்கான திட்டத்திற்கு (RTK) விண்ணப்பம் செய்வதன் தொடர்பில் அந்த 11 அதிகாரிகளும் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைதாகினர்.

கைதானவர்கள் 30க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதினர். மேலும், அவர்களில் நால்வர் பெண் அதிகாரிகள்.

கோலாலம்பூர் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த புதன்கிழமை (நவம்பர் 12) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் சிக்கினர்.

11 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 3,121,813.10 ரிங்கிட் தொகையை இருப்பில் வைத்திருக்கும் 36 வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணையத்தின் தலைமை ஆணையர் ஆஸாம் பாகி தெரிவித்துள்ளார்.

லஞ்சம் வாங்கியதாகச் சொல்லப்பட்ட விவகாரத்தில் நான்கு கார்கள், ஐந்து மோட்டார் சைக்கிள்கள், தலா 0.3 கிராம் எடையுள்ள இரண்டு தங்கக் கட்டிகள், 7,000 ரிங்கிட் மதிப்புள்ள நான்கு நகைகள், 116,702 ரிங்கிட் ரொக்கம் ஆகியன கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“வெளிநாட்டு ஊழியர்களை முறைப்படுத்தும் திட்டம் தொடர்பான விண்ணப்பங்களை வேகமாகப் பரிசீலிக்க லஞ்சம் தரப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியரும் 600 ரிங்கிட் லஞ்சம் கொடுத்திருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்