மலேசியத் திறனாளர் கழகத்தின் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம்

மலேசியத் திறனாளர் கழகத்தின் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம்

2 mins read
c7df67f2-6292-478a-82c7-23dd8a981ef4
மலேசிய மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் இதற்கான நியமனக் கடிதத்தைப் புதன்கிழமை (ஏப்ரல் 15) திருவாட்டி பிருந்தா மூர்த்தியிடம் நேரில் வழங்கினார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவின் திறனாளர் மேம்பாட்டுத் திட்டங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் ஒரு முக்கிய நடவடிக்கையாக மலேசியத் திறனாளர் கழகத்தின் (TALENTCORP) புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி புதன்கிழமை (ஏப்ரல் 15) நியமிக்கப்பட்டுள்ளார்.

மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் இதற்கான நியமனக் கடிதத்தை புதன்கிழமை அவரிடம் நேரில் வழங்கினார். இந்த நியமனம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாக அமலுக்கு வருகிறது.

இந்த நியமனம் குறித்துப் பேசிய திரு ரமணன், இன்றைய நவீன தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப மலேசிய மக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு இது ஒரு சரியான முடிவாகும் என்று குறிப்பிட்டார்.

அரசாங்கம், கல்வி, தொழில்துறை எனப் பல்வேறு முக்கியத் துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பிருந்தா, ‘டேலண்ட்கார்ப்’ நிறுவனத்தை மிகச் சிறப்பாக வழிநடத்துவார் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

“புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும், தொழில்துறைக்குத் தேவையான தகுதியானவர்களை உருவாக்குவதிலும் பிருந்தாவின் அனுபவம் நாட்டிற்கு ஒரு பெரிய பலமாக இருக்கும். குறிப்பாக, தற்போதுள்ள சவாலான பொருளியல் சூழலில் இவரது தலைமைத்துவம் மிக முக்கியமானது,” என்று அமைச்சர் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிருந்தாவின் தலைமையின்கீழ், டேலண்ட் கார்ப் நிறுவனம் நாட்டின் வேலைவாய்ப்புச் சந்தையை வலுப்படுத்துவதோடு, மலேசியர்களுக்குச் சிறந்த, தரமான வேலைவாய்ப்புகள் கிடைப்பதை உறுதிசெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், இதற்குமுன் இந்தப் பொறுப்பை வகித்த எட்வர்ட் லிங் ஆற்றிய சிறந்த பணிகளுக்காகத் திரு ரமணன் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். புதிய பொறுப்பை ஏற்கும் பிருந்தா மூர்த்தி, தமது பணியில் பெரிய வெற்றிகளைப் பெற்று நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும் என அமைச்சர் மனதார வாழ்த்தியதாக பெர்னாமா தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்