லண்டன்: இருநாட்டுக் குடி உரிமையை வைத்திருக்கும் விளாடிமிர் காரா-முர்ஸா என்பவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் தொடர்பில், சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களுக்கு எதிராக பிரிட்டன் திங்கட்கிழமை தடை பிறப்பித்துள்ளது.
காரா-முர்ஸாவுக்கு விதிக்கப்பட்ட 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, பிரிட்டன் அத்தடைகளை விதித்தது.
மூன்று நீதிபதிகள், இரண்டு வழக்கறிஞர்கள், சாட்சியமளித்த நிபுணர் ஒருவர் என அறுவருக்கு எதிராகத் தடைகளைப் பிறப்பித்துள்ளதாக லண்டன் அறிவித்தது.
போருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால், விளாடிமிர் காரா-முர்ஸாவை ரஷ்யா இந்த நிலைக்கு ஆளாக்குவதாக பிரிட்டன் கூறுகிறது.
பிரிட்டிஷ் குடியுரிமையையும் வைத்திருக்கும் காரா-முர்ஸா உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி கேட்டுக்கொண்டுள்ளார்.
பொய்க் குற்றச்சாட்டுகளினால் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து செய்யப்பட்ட காரா-முர் ஸாவின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது ரஷ்ய ஆட்சியின் ஒழுக்கச் சீர்கேட்டைக் கோடிகாட்டு வதாகத் திரு கிளவர்லி கூறினார்.
“நாம் இந்த வழக்கின் தொடர்பில் இன்று ஆறு நபர்களுக்கு எதிராகத் தடைகளைப் பிறப்பித்துள்ளோம். அதன் குடிமக்களில் யாரும் இத்தகைய முறையில் நடத்தப்படுவதை பிரிட்டன் பொறுத்துக்கொள்ளாது என்ற தெளிவான செய்தி இதன்மூலம் தெரிகிறது”, என்றார் அவர்.
இந்த வழக்கின் தொடர்பில் லண்டன் ஏற்கெனவே ஐவருக்கு எதிராகத் தடைகளை விதித்துள்ளது. நீதிபதி ஒருவர், புலன் விசாரணையாளர்கள் இருவர், மத்திய பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் ஆகியோரே அவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் காரா-முர்ஸா நரம்புப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் 2015லும் 2017லும் இரண்டு முறை நஞ்சு உட்கொள்ள முயன்றதே அதற்குக் காரணம் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறினர். அந்தப் பிரச்சினை சிறையில் மேலும் மோசமாகிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராகத் தனிநபர் தடைகளைப் பிறப்பிப்பதற்கான நடவடிக்கையைக் கடைப்பிடிக்குமாறு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கடந்த சில ஆண்டுகளாக காரா-முர்ஸா கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் கடைசியாகப் பேசியபோது, காரா-முர்ஸா தமது அரசியல் பணிகளை விட்டுக்கொடுக்காமல் பேசினார். உக்ரேனில் நடத்தப்பட்ட தாக்குதல்களைக் குறை கூறியதும் அவற்றில் அடங்கும். அதன் காரணமாகத்தான் ரஷ்யா அவருக்குச் சிறைத்தண்டனையை விதித்தது.


