லண்டன்: வெளிநாட்டுக் குடியேறிகள், பிரிட்டனில் நிரந்தரமாகத் தங்குவதற்குரிய விதிமுறைகளைக் கடுமையாக்கத் திட்டமிடுகிறது அந்நாட்டின் தொழிற்கட்சி அரசாங்கம்.
குடியேறிகள் நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பிக்க 20 ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூட் வியாழக்கிழமை (நவம்பர் 20) அறிவித்தார்.
பிரிட்டனில் சட்டப்படி குடியேறியவர்களைக் குறைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அவரின் பரிந்துரை அமைகிறது. சட்டவிரோதக் குடியேற்றம் குறித்த விதிமுறைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்று திருவாட்டி ஷபானா கூறிய ஒருசில நாள்களில் அண்மை அறிவிப்பு வந்துள்ளது.
பிரிட்டன் சீர்திருத்தக் கட்சி முன்வைக்கும் குடிநுழைவுக்கு எதிரான கருத்துகளுக்குப் பொதுமக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. அதனை எதிர்கொள்ளும் முகமாக அரசாங்கத்தின் அண்மை அறிவிப்புகள் பார்க்கப்படுகின்றன.
பிரிட்டனின் பொதுச்சேவைத் துறை, வேலைச் சுமையால் கடும் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. அதனைத் தணிக்கும் விதமாகவும் உள்துறை அமைச்சரின் அறிவிப்பு அமைந்துள்ளது.
“இந்த நாட்டில் என்றென்றும் தங்கியிருப்பது என்பது உரிமை அன்று. மாறாக, சலுகை. அதனை உழைத்துப் பெறவேண்டும்,” என்று திருவாட்டி ஷபானா நாடாளுமன்றத்தில் கூறினார். அவரின் பெற்றோர், பாகிஸ்தானிலிருந்து பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தவர்கள்.
‘ஐஎல்ஆர்’ (ILR) எனப்படும் காலவரம்பின்றித் தங்குவதற்கான அனுமதிக்குத் தகுதிபெறும் காலத்தை ஐந்தாண்டிலிருந்து பத்தாண்டுக்கு உயர்த்தவிரும்புவதாக அரசாங்கம் இவ்வாண்டு (2025) மே மாதம் அறிவித்திருந்தது.
முறையான வழிகளில் குடியேறி, 12 மாதத்திற்கும் மேல் அனுகூலங்களைப் பெற்றவர்கள், அதற்கு விண்ணப்பிக்க 20 ஆண்டு காத்திருக்க வேண்டியிருக்கும் என்றார் திருவாட்டி ஷபானா.
தொடர்புடைய செய்திகள்
முறையற்ற வழிகளில் வருவோருக்கு அது 30 ஆண்டாக இருக்கும்.
கூடுதல் சம்பளம் ஈட்டுவோர், அதற்கு விண்ணப்பிக்க மூவாண்டிலேயே தகுதிபெற முடியும் என்று உள்துறை அமைச்சு சொன்னது.
பிரிட்டனின் கதையில், குடியேற்றம் என்பது எப்போதுமே முக்கியமான அங்கமாக இருக்கும் என்றார் அமைச்சர் ஷபானா. ஆனால் அண்மை ஆண்டுகளில் அதன் அளவு, நிலைதடுமாற வைப்பதாக அவர் கூறினார்.
2026க்கும் 2030க்கும் இடையில் ஏறக்குறைய 1.6 மில்லியன் பேர், காலவரம்பின்றித் தங்குவதற்கான அனுமதிக்குத் தகுதி பெற்றிருப்பர் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கணித்துள்ளது.

